மகாராஷ்டிராவில் நடைபெறும் ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் பங்கேற்பேன்- சரத் பவார்
- கர்நாடகாவை தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்திற்குள் நுழைந்தது பாத யாத்திரை.
- சமூகத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக பவார் தகவல்
மும்பை:
தமிழகம், கேரளாவை தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்று வந்த ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயண பாத யாத்திரை நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்தை பாத யாத்திரை சென்றடைந்தது. அம்மாநில காங்கிரஸ் தலைவர் அனுமூலரேவந்த் ரெட்டியிடம் தேசிய கொடியை கர்நாடகா எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகியோர வழங்கினர்.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் நடைபெறும் ராகுல்காந்தியின் பாத யாத்திரையில் பங்கேற்க போவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அசோக் சவான் உள்பட மாநில காங்கிரஸ் தலைவர்கள் தன்னைச் சந்தித்து, நவம்பர் 7 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் பாத யாத்திரை நுழையும் போது, ஒரு பயணத் திட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
பாத யாத்திரை காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சி என்றாலும் இதன் மூலம் சமூகத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது, எனவே, இங்கு அது நடைபெறும்போது அதில் இணைவோம் என்றும் சரத்பவார் குறிப்பிட்டுள்ளார்.