பால் தாக்கரேவுக்கு பாரத ரத்னா அறிவிக்க வேண்டும்: சஞ்சய் ராவத் வலியுறுத்தல்
- கடந்த 4-ம் தேதி பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.
- முன்னாள் பிரதமர்கள் உள்பட 3 பேருக்கு பாரத ரத்னா விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை:
இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருது பாரத ரத்னா ஆகும். அரசியல், கலை, இலக்கியம் என தங்கள் துறைகளில் அளப்பரிய சாதனைகளைச் செய்பவர்களுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவிக்கிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன் பீகாரைச் சேர்ந்த கர்பூரி தாகூருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்தது. கடந்த 4-ம் தேதி பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ், டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது இன்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சிவசேனா உத்தவ் தாக்கரே கட்சியின் எம்.பி.யான சஞ்சய் ராவத், கட்சி தலைவரான பாலா சாகேப் தாக்கரேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேபோல், மகா நிர்மாண் சேனா கட்சியின் தலைவரான ராஜ் தாக்கரேவும் பாலா சாகேப் தாக்கரேவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.