இந்தியா

சொத்து குவிப்பு வழக்கு: டி.கே. சிவக்குமார் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

Published On 2024-07-15 09:46 GMT   |   Update On 2024-07-15 11:36 GMT
  • வரம்பு மீறி சொத்து சேர்த்ததாக 2020-ல் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
  • இதை எதிர்த்து டி.கே. சிவக்குமார் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டது.

கர்நாடக மாநில துணை முதல்வராக இருக்கும் டி.கே. சிவக்குமார் வரம்பு மீறி சொத்து சேர்த்ததாக கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ந்தேதி சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

2013 முதல் 2018 வரையிலான அவருடைய வருமானத்தை கணக்கில் கொள்ளும்போது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரியவந்தது என சிபிஐ தெரிவித்தது.

சிபிஐ-யின் இந்த வழக்குப்பதிவை எதிர்த்து டி.கே. சிவக்குமார் 2021-ல் கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில் சிபிஐ விசாரணை நடத்த தடைவிதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19-ந்தேதி டி.கே. சிவக்குமார் தாக்குதல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் பீலா எம். திரிவேதி, எஸ்.சி. சர்மா அடங்கிய பெஞ்ச், "உச்சநீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை. அதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்" என்றனர். மேலும், மூன்று மாதங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

2013 முதல் 2018 வரை டி.கே. சிவக்குமார் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மந்திரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News