பிரதமர் மோடியின் திட்டங்கள் செயல்படுத்துவதை கண்காணிக்கும் சிவராஜ் சிங் சவுகான்
- பிரதமர் மோடி அறிவித்த திட்டங்கள், மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் செயல்படுத்துவதை காண்காணிக்க குழு.
- கண்காணிக்கும் குழுவின் தலைவராக சிவராஜ் சிங் சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடி அறிவித்துள்ள அனைத்து திட்டங்களும் செயல்படுத்துவதை காண்காணிக்க விவசாயம், விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் காண்காணிப்பு குழுவை அமைத்துள்ளார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி அறிவித்த திட்டங்கள், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள், கட்டமைப்பு திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் செயல்படுவதை இந்த குழு கண்காணிக்கும்.
இந்த குழுவின் முதல் கூட்டம் பிரதமர் அலுவலகத்தில் கடந்த 18-ந்தேதி நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் அனைத்து துறைகளின் செயலாளர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
அனைத்து திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கண்காணிக்கும் அதிகாரத்தை சிவராஜ் சிங் சவுகானிடம் பிரதமர் மோடி வழங்கியுள்ளார். 2014-ல் பிரதமர் மோடி பதவி ஏற்றதில் இருந்து தற்போது வரையிலான திட்டங்கள் குறித்து சிவராஜ் சிங் தலைமையிலான குழு காண்காணிக்கும்.
திட்டங்களில் ஏதாவது குறைபாடு இருந்தாலோ அல்லது மந்திரிகளிடையிலான ஆதரவு தேவைப்பட்டாலோ பிரதமர் அலுவலகம் எதிர்பார்ப்பதை சம்பந்தபட்ட துறைகளின் செயலாளர்களிடம் சவுகான் எடுத்துரைப்பார்.
அன்றாட நிர்வாகம் மற்றும் உலகளாவிய விவகாரங்கள் ஆகிய இரண்டிலும் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளதால், அரசாங்க திட்டங்களைச் செயல்படுத்துவதில் கால தாமதம் குறித்து கவலைப்படுவதாகவும், தனது அச்சங்களை அடிக்கடி தனது செயலர்கள் மற்றம் பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகளுடன் தனிப்பட்ட கூட்டங்களில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாகத்தான் சிவராஜ் சிங் தலைமையில் கண்காணிப்பு குழுவை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. சிவராஜ் சிங் சவுகான் மத்திய பிரதேச முன்னாள் முதல்வராவார். மூன்று முறை இவர் மத்திய பிரதேச மாநில முதல்வராக இருந்துள்ளார். 2024-ல் பிரதமர் வேட்பாளராக மோடி தேர்வு செய்யப்பட்டபோது, இவரது பெயரும் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.