சீதாராம் யெச்சூரி மறைவு: குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்
- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
- தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார். சீதாராம் யெச்சூரி மறைவுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது குறித்த பதிவில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மறைவு குறித்து அறிந்து வருத்தம் அடைந்தேன். முதலில் மாணவர் தலைவராகவும், பின்னர் தேசிய அரசியலிலும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் தனித்துவம் வாய்ந்த, செல்வாக்கு மிக்க குரலாக இருந்தவர். உறுதியான சித்தாந்தவாதியாக இருந்தாலும், கட்சி எல்லைகளைக் கடந்து நண்பர்களை வென்றார். அவரது குடும்பத்தினருக்கும் சக ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்," என்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு குறிப்பிட்டுள்ளார்.
"சீதாராம் யெச்சூரியின் மறைவு வருத்தமளிக்கிறது. அவர் இடதுசாரிகளின் முன்னணி வெளிச்சமாக இருந்தார். அரசியல் ஸ்பெக்ட்ரம் முழுவதையும் இணைக்கும் திறனுக்காக அறியப்பட்டார். திறமையான நாடாளுமன்ற உறுப்பினராகவும் முத்திரை பதித்தார். இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும், பின்தொடர்வோருடனும் உள்ளன, ஓம் சாந்தி," என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.