இந்தியா

என் அனுபவத்துல சொல்றேன்.. 'சொந்த குடும்பத்தை உடைப்பவர்களை சமூகம் ஏற்காது' - அஜித் பவார் ஆதங்கம்

Published On 2024-09-08 07:39 GMT   |   Update On 2024-09-08 07:39 GMT
  • அஜித் பவார் அணியைச் சேர்ந்த அமைச்சர் பாபா ஆத்ராம் என்பவரது மகள் பாக்கியஸ்ரீ சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் அணிக்கு தாவ உள்ளார்
  • எனது மகளையும் மருமகனையும் ஆற்றில் தூக்கி வீசுங்கள் என்று பாபா ஆத்ரம் கடுமையாக பேசியிருந்தார்.

மகாராட்டிர தேர்தல் நெருங்குவதை ஒட்டி துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத - பாஜக - ஷிண்டே சிவசேனா ஆகியோர் இடம்பெற்றுள்ள மஹாயுதி கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது. சித்தப்பா சரத் பவாரின் தேசியவாத காங்கிரசை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் தங்கள் பக்கம் வந்த அவரது அண்ணன் மகன் அஜித் பவாரின் நடவடிக்கைகளை பாஜக மேலிடம் சந்தேகக் கண்களோடு கவனித்து வருகிறது.

குறிப்பாக மக்களவைத் தேர்தலில் சரத் பவார் அணி சார்பில் இந்திய கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டு வென்ற சகோதரி சுப்ரியா சூலேவை எதிர்த்து தனது மனைவியை நிறுத்தியிருக்கக்கூடாது என்று அஜித் பவார் கூறியது கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு வருவதை வெளிப்படையாக காட்டியது.

மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிர பாஜக கூட்டணி பின் தங்கியதற்கு அஜித் பவார் அணி தான் காரணம் என்ற சலசலப்பும் கூட்டணி கட்சிகள் மத்தியில் இருந்து வருகிறது. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்று அறிவித்த அஜித் பவார் மகனை நிறுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் குடும்பத்தை உடைத்தது பெரிய தவறு என்று அஜித் பவார் பொதுவெளியில் மீண்டும் வருத்தப்பட்டு உள்ளார்.

அஜித் பவார் அணியைச் சேர்ந்த அமைச்சர் பாபா ஆத்ராம் என்பவரது மகள் பாக்கியஸ்ரீ சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் அணிக்கு தாவ உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எனது மகளையும் மருமகனையும் ஆற்றில் தூக்கி வீசுங்கள் என்று பாபா ஆத்ரம் கடுமையாக பேசியிருந்தார். இந்நிலையில் கட்சிரோலி நகரில் நடந்த ஜனசம்மான் பேரணியில் கலந்துகொண்ட அஜித் பவார், ஒரு மகளை அவரது தந்தையை விட யாரும் அதிகமாக நேசிக்க மாட்டார்கள், உங்களை [பாக்கியஸ்ரீ] ஜில்லா பிரெசிடெண்டாக ஆக்கினார் உங்கள் தந்தை.

ஆனால் நீங்கள் இப்போது அவருடன் சண்டை போடுவது சரிதானா? உங்கள் தந்தைக்கு நீங்கள் ஆதரவாக இருக்க வேண்டும். அவரை விட்டு செல்வது குடும்பத்தை உடைப்பது போன்றது, தனது சொந்த குடும்பத்தையே உடைக்கும் ஒருவரை இந்த சமூகம் எப்போதும் ஏற்றுக்கொள்ளாது. நானும் அதை அனுபவித்திருக்கிறேன், எனது தவறை நான் ஏற்றுகொண்டடேன் என்று தெரிவித்துள்ளார்.

சரத் பவாரை விட்டு வெளியேறியதைத் தவறு என்று அஜித் பாவர் கூறியுள்ளது பாஜக மேலிடத்தில் கொந்தளிப்பை எப்ராடுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. 

Tags:    

Similar News