காவல் நிலையத்திற்குள் புகுந்து காவலர்களை தாக்கிய ராணுவ வீரர்கள்: 16 பேர் மீது வழக்கு பதிவு
- ஒரு ராணுவ அதிகாரியின் வீட்டில் ஒரு வழக்கு விசாரணைக்காக காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
- ராணுவ வீரர்கள் காவலர்களை தாக்கும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் காவல்நிலையத்தில் நுழைந்த ராணுவ வீரர்கள் அங்குள்ள காவலர்களை தாக்கியதில் 4 காவலர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த ரயீஸ் கான், இம்தியாஸ் மாலிக், சலீம் முஷ்டாக், ஜாகூர் அஹ்மத் ஆகிய 4 காவலர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கொலை முயற்சி, அரசு ஊழியரை பனி செய்ய விடாமல் தடுத்தல், பணியில் இருக்கும் அரசு ஊழியரை தாக்குதல் உள்ளிட்ட பல பிரிவுகளில் 16 ராணுவ வீரர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 16 பேரில் 3 பேர் லெப்டினல் கர்னல் பதவியில் இருக்கும் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு ராணுவ அதிகாரியின் வீட்டில் ஒரு வழக்கு விசாரணைக்காக காவல்துறையினர் சோதனை நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த ராணுவ வீரர்கள் காவல்நிலையத்தில் உள்ள காவலர்களை தாக்கியதாக சொல்லப்படுகிறது.
காவல்நிலையத்திற்குள் ராணுவ வீரர்கள் புகுந்து காவலர்களை தாக்கும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
காவல்துறை அதிகாரிகளை ராணுவ வீரர்கள் தாக்கியதாக வெளிவரும் தகவல்கள் தவறானவை என்றும் காவல்துறையினருக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட சிறு பிரச்சனை இப்போது பேசி தீர்க்கபட்டுள்ளது என்று இந்திய ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.