இந்தியா

குதுப்மினாரை விட 3 மடங்கு பெரிய ஸ்கை டெக்: கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்

Published On 2024-08-23 09:43 GMT   |   Update On 2024-08-23 10:01 GMT
  • கர்நாடகாவில் ரூ.500 கோடி செலவில் மிக உயரமான ஸ்கை டெக் அமைய உள்ளது.
  • இந்தத் திட்டத்துக்கு கர்நாடக மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தின் பெங்களூரூவில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு முடிவுசெய்துள்ளது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக 250 மீட்டர் உயரத்திற்கு ஸ்கை டெக் எனப்படும் வானுயர கோபுரம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்டத்திற்கு கர்நாடகா அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

தென் ஆசியாவின் முதல் உயரமான கட்டிடமாக இது அமைய உள்ளது. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள குதுப்மினார் கட்டிடம் 73 மீட்டர் உயரம் கொண்டது. அதனைவிட பெங்களூருவில் அமையவிருக்கும் இந்த ஸ்கை டெக் 3 மடங்கு உயரமானதாகும்.

பெங்களூரு நகரின் மையப் பகுதியில் ஸ்கை டெக் அமைக்க முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக நகரின் மையப்பகுதியில் 25 ஏக்கர் நிலத்தை எடுப்பது சவாலானது. மேலும், பெங்களூரூவில் பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான பகுதிகள் நிறைய உள்ளதால், இந்த உயரமான கோபுரத்தை அமைக்க அனுமதி கிடைப்பதில் சந்தேகம்.

அதுமட்டுமின்றி, பொதுமக்களின் பாதுகாப்பு, ராணுவ விமான நிலையம் உள்ளிட்டவை இந்த ஸ்கை டெக்கை அமைப்பதற்கு சாத்தியக் கூறுகள் அற்றவையாக ஆக்கியுள்ளன. எனவே பெங்களூரூ நகரத்திற்கு வெளியே இந்த 250 மீட்டர் உயரமுள்ள ஸ்கை டெக் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ரூ.1,269 கோடி செலவில் பெங்களூருவில் ஹெப்பல்-சில்க் போர்டு ஜங்ஷன் வரையில் இரட்டைவழி சுரங்கப்பாதை அமைக்கவும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

Tags:    

Similar News