இந்தியா

விமானத்தில் இருமுடியுடன் பயணிக்கலாம்: சபரிமலை பக்தர்களுக்கு சிறப்பு சலுகை

Published On 2024-10-26 19:23 GMT   |   Update On 2024-10-26 19:23 GMT
  • அய்யப்ப பக்தர்களுக்கு இருமுடி கட்டுகளுடன் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • நடப்பு சீசனின் மகரவிளக்கு பூஜை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி நடைபெறும்

சபரிமலை:

2024-ம் ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடுத்த மாதம் 15-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்றைய தினம் சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள், தந்திரி முன்னிலையில் மூல மந்திரம் சொல்லி பதவி ஏற்கிறார்கள். மறுநாள் (16-ம் தேதி) முதல் புதிய மேல்சாந்திகள் நடையை திறந்து பூஜைகள் மற்றும் வழிபாடுகளை நிறைவேற்றுவார்கள்.

டிசம்பர் மாதம் 26-ம் தேதி மண்டல பூஜை நடக்கிறது. அன்று இரவு நடை சாத்தப்படும். மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் மாதம் 30-ம் தேதி நடை திறக்கப்படும்.

நடப்பு சீசனின் மகரவிளக்கு பூஜை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி நடைபெறும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வரும்போது, இருமுடி தனியாக வைக்கப்பட்டு பயணிகள் மட்டும் விமானத்தில் அனுமதிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நடப்பு சீசனையொட்டி சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் விமான பயணத்தின் போது இருமுடி கட்டுடன் நெய், தேங்காய் உள்பட பொருட்களை எடுத்துச்செல்ல மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது.

பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். இந்த சலுகை நடப்பு மண்டல மகர விளக்கு பூஜை சமயத்தில் மட்டுமே பொருந்தும் எனவும், மாத பூஜை காலங்களில் இந்த சலுகை கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது முதல் ஜனவரி மாதம் 20-ம் தேதி வரை சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடியைக் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் மத்திய விமான போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News