காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து வெறும் காகிதத்தில் மட்டுமே உள்ளது: சஞ்சய் ராவத்
- புல்வாமாவில் பயங்கரவாதிகளால் காஷ்மீர் பண்டிட் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
- பஞ்சாப்பில் காலிஸ்தான் சார்ப்பு அமைப்புகள் மீண்டும் தலைதூக்குவது கவலை அளிக்கிறது.
மும்பை :
காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் சமீபத்தில் காஷ்மீரி பண்டிட் ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டார். இதுகுறித்து உத்தவ் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் சஞ்சய் ராவத் எம்.பி. எழுதிய கட்டுரை வெளியானது. அதில் அவர் கூறி இருப்பதாவது:-
ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது, தற்போதும் இருக்கிறது. இருப்பினும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சிறப்பு அந்தஸ்து ரத்து வெறும் காகிதமாக மட்டுமே உள்ளது. அதுமட்டும் இன்றி இந்த நடவடிக்கை பா.ஜனதா கட்சி தனது அரசியல் லாபத்துக்காக மட்டுமே மேற்கொண்டது. காஷ்மீர் பண்டிட்டுகளுக்கான உரிமை இன்னும் கிடைக்கவில்லை. அவர்கள் படும் துயரங்களுக்கு பா.ஜனதா தலைவர்களிடம் பதில் இல்லை.
சமீபத்தில் கூட புல்வாமாவில் பயங்கரவாதிகளால் காஷ்மீர் பண்டிட் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
ஆனால் டெல்லி துணை முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான மணீஷ் சிசோடியாவை ஊழல் வழக்கில் கைது செய்ததன் மூலமாக பண்டிட்டுகளின் பிரச்சினையில் இருந்து அரசு மக்களை திசை திருப்பியது.
ராகுல் காந்தியின் தலைமையிலான இந்திய ஒற்றுமை பயணத்தில் கலந்துகொள்வதற்காக நான் சமீபத்தில் வடக்கு யூனியன் பிரதேசத்திற்கு சென்று இருந்தேன். அப்போது காஷ்மீர் பண்டிட் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர் தங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்களை இந்த அரசு வலுக்கட்டாயமாக மீண்டும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் மறு குடியமர்வு செய்கிறது. இருப்பினும் தங்களின் பாதுகாப்புக்கு அரசு எந்த உத்தரவாதமும் வழங்க தயாராக இல்லை என்று என்னிடம் கூறினார்.
சமீபத்தில் லவ் -ஜிகாத் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி மும்பையில் "இந்து ஆக்ரோஷ் மோர்சா" போராட்டத்தை வலதுசாரி அமைப்புகள் நடத்தின. அவர்கள் காஷ்மீர் பண்டித் கொல்லப்பட்டதற்கு எதிராக ஜம்மு காஷ்மீரில் தங்கள் போராட்டத்தை நடத்த வேண்டும்.
பஞ்சாப்பில் காலிஸ்தான் சார்ப்பு அமைப்புகள் மீண்டும் தலைதூக்குவது கவலை அளிக்கிறது. இது உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை, இதை அங்குள்ள மாநில அரசின் பொறுப்பில் விட்டுவிட முடியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.