மோடி பதவியேற்பு விழா: இலங்கை, மாலத்தீவு அதிபர்கள் வருகை
- மோடி 3-வது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
- பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் மோடி 3வது முறையாக பதவியேற்கும் விழா இன்று இரவு 7: 15 மணிக்கு நடக்கிறது. இதற்காக உலக தலைவர்கள், பல்வேறு மாநில கவர்னர்கள், மாநில முதல் மந்திரிகள், திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள் வருகை தந்தவண்ணம் உள்ளனர்.
பிரதமர் மோடி பதவியேற்க இருப்பதை பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
இவ்விழாவில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மாலத்தீவு அதிபர் முகமது முயிசு, சீசெல்ஸ் துணை அதிபர் அஹமது அபிப், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மொரீசியஸ் பிரதமர் பிரவின்குமார் ஜெகநாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா, பூடான் பிரதமர் ஷெரீங் டோப்கே ஆகியோர் பங்கேற்கின்றனர்.
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, சீசெல்ஸ் துணை அதிபர் அஹமது அபிப் ஆகியோர் நேற்று டெல்லி வந்தனர்.
இந்நிலையில், மாலத்தீவு அதிபர் முகமது முயிசு இன்று காலை டெல்லி வந்தார். அவரை வெளியுறவு அமைச்சக அதிகாரி பவன் கபூர் விமான நிலையத்தில் வரவேற்றார். தொடர்ந்து டெல்லி வந்த மொரீசியஸ் பிரதமர் பிரவின் குமார் ஜெகநாத்தை வெளியுறவு அமைச்சக அதிகாரி குமரன் வரவேற்றார். இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பூடான் பிரதமர் ஷெரீங் டோப்கேவை வெளியுறவு அமைச்சக அதிகாரி பவன் கபூர் டெல்லி விமான நிலையத்தில் வரவேற்றார்.
இந்த முறை ஆசிய நாட்டின் தலைவர்கள் பெரும்பாலானோர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளனர்.
பதவியேற்பு விழாவில் உலக தலைவர்கள் மற்றும் நாட்டின் முக்கிய பிரபலங்கள் பங்கேற்க இருப்பதால் ஒட்டுமொத்த டெல்லியும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.