இறந்துவிட்டதாக அறிவித்த அரசு - உயிருடன் இருப்பதை நிரூபிக்க குற்றங்களில் ஈடுபட்ட நபர் கைது
- அரசின் இறப்பு சான்றிதழை ரத்து செய்வதற்கு சட்ட வழிகளை பாபுராம் நாடியுள்ளார்.
- அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் அவரது கோரிக்கை நிறைவேறவில்லை.
ராஜஸ்தானில் அரசால் இறப்புச் சான்றிதழ் அளிக்கப்பட்ட பாபுராம் என்பவர், தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க பல முறை அலைந்தும், முடியாததால் குற்றங்களில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிதோரா கிராமத்தில் வசிக்கும் பாபுராம் பில்லுக்கு ராஜஸ்தான் அரசு தவறுதலாக இறப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால் தனது அடையாளத்தையும், சொத்துக்களுக்கான உரிமையையும் பாபுராம் இழந்துள்ளார்.
அரசின் இறப்பு சான்றிதழை ரத்து செய்வதற்கு சட்ட வழிகளை பாபுராம் நாடியுள்ளார். ஆனால் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் அவரது கோரிக்கை நிறைவேறவில்லை.
இதனால் விரக்தியடைந்த பாபுராம் தன்னுடைய இருப்பை நிரூபிப்பதற்கு வித்தியாசமான வழிமுறையை கண்டறிந்தார்.
அதன்படி, சமீபத்தில் பெட்ரோல் பாட்டில் மற்றும் கத்தியுடன் பள்ளி வளாகத்தில் புகுந்து பலரையும் பாபுராம் தாக்கியுள்ளார். பின்னர் போலீசார் விரைந்து வந்து பாபுராமை கைது செய்தனர். போலீசாரிடம் பிடிபட்ட போது, "போலீசார் என்னை கைது செய்தால்தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க முடியும்" என்று பாபுராம் கூறியுள்ளார்
பின்னர் போலீசாரின் விசாரணையில், தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க செல்போன் டவரில் ஏறி மிரட்டிய பாபுராம் கடைசியாக பள்ளியில் புகுந்து ஆசிரியர்களை தாக்கியுள்ளார் என்பது தெரியவந்தது.
பாபுராம் கூறிய விவரங்கள் தொடர்பாக காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.