டிராஃபிக்ல இருந்தாலும் சுடச்சுட டெலிவரி செய்வோம்.. வைரலாகும் பீட்சா வீடியோ
- பெங்களூரு நகரின் அவுட்டர் ரிங் ரோட் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- போக்குவரத்து நெரிசலின் போது பசியை போக்க நபர் ஒருவர் டோமினோஸ்-ஐ அழைத்தார்.
இந்தியாவில் பல்வேறு நகரங்களில் போக்குவரத்து நெரிசல் மிகவும் சாதாரண விஷயமாகவே மாறி விட்டது. மக்கள் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் செலவிட வேண்டியிருப்பதால், அதற்கு ஏற்றார் போல் தங்களது அலுவல்களை திட்டமிட வேண்டிய சூழல் நிலவுகிறது. அந்த வகையில், பெங்களூரு, போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் போன நகரமாக இருக்கிறது.
அப்படியாக பெங்களூரு நகரின் அவுட்டர் ரிங் ரோட் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மற்றவர்களை போன்றே போக்குவரத்து நெரிசலில் என்ன செய்வது என்று தெரியாமல், நபர் ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்தார். 30 நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய வீடியோ, ஒட்டுமொத்த இணையவாசிகளிடையே வேகமாக பரவி, உடனே வைரல் ஆனது.
வைரல் வீடியோவில் என்னதான் இருந்தது? என்ற எண்ணத்தில் அதனை பார்த்த அனைவரும், அட இப்படியும் செய்யலாமா? என்றும், பெங்களூருவில் இதெல்லாம் சகஜம் தானப்பா? என்றும் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். அப்படியாக வீடியோவை வெளியிட்ட நபர், போக்குவரத்து நெரிசலின் போது, தனக்கு ஏற்பட்ட பசியை போக்க, டோமினோஸ்-ஐ அழைத்தார்.
வாடிக்கையாளரை காக்க வைப்போமா? என்ற நினைப்பில் டோமினோஸ்-ம் தனது வாடிக்கையாளருக்கு சுடச்சுட பீட்சாவை பேக் செய்து, தனது டெலிவரி ஊழியர்களை களத்தில் இறக்கியது. டெலிவரி ஊழியர்கள் கடுமையான போக்குவரத்து நெரிசலிலும், ஆர்டர் செய்த வாடிக்கையாளரின் லைவ் லொகேஷனை பார்த்து, அவரின் காரில் வைத்து சூடான பீட்சாவை டெலிவரி செய்தனர்.
போக்குவரத்து நெரிசலில் பீட்சா பெறும் வீடியோவைத் தான் அந்த நபர் தனது எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்தார். அந்த வீடியோவை பார்த்த பலரும் டெலிவரி செய்த ஊழியர்களை பாராட்டியும், பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் எப்போ தான் சரியாகுமோ? என்றும் கமெண்ட் செய்தனர்.