இந்தியா

மழைநீர் கசிவால் வகுப்பறையில் குடை பிடித்தப்படி கல்வி பயிலும் மாணவர்கள்

Published On 2023-07-09 02:32 GMT   |   Update On 2023-07-09 02:32 GMT
  • பள்ளியின் வகுப்பறை கட்டிடங்கள் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது.
  • பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

பெங்களூரு :

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் தாலுகாவில் ஒரு கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 125 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் வகுப்பறை கட்டிடங்கள் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்திலேயே மாணவ-மாணவிகள் பாடம் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது சிவமொக்கா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒசநகரில் உள்ள இந்த அரசு பள்ளியின் மேற்கூரை சேதம் அடைந்துள்ளதால் மழைநீர் வகுப்பறையில் கசிகிறது.

இதனால் மாணவ-மாணவிகள் குடைகளை பிடித்தப்படியே வகுப்பறையில் அமர்ந்து கல்வி பயின்று வருகிறார்கள். பாடம் நடத்தும் ஆசிரியரும் குடையை பிடித்தப்படியே பாடம் நடத்தி வருகிறார். இதனை கடந்த 2 தினங்களுக்கு முன்பு யாரோ படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பள்ளி கல்வித்துறை மந்திரி மது பங்காரப்பாவின் சொந்த மாவட்டத்திலேயே அரசு பள்ளிக்கு இந்த அவல நிலையா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் அந்தப்பகுதி மக்கள் பள்ளி கட்டிடம் பல ஆண்டுகளாக சேதமடைந்து கிடக்கிறது. ஆசிரியர்களும், மாணவ-மாணவிகளும் எப்போது இடிந்து விழும் என்ற அச்சத்துடனேயே வகுப்பறையில் இருக்கின்றனர் என குற்றம்சாட்டினர்.

Tags:    

Similar News