இந்தியா

பாபர் மசூதி இடிப்பை மாணவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டும்- ஒவைசி

Published On 2024-06-18 11:15 GMT   |   Update On 2024-06-18 11:15 GMT
  • என்.சி.இ.ஆர்.டி. பாடப் புத்தகத்தில் பாபர் மசூதி பெயர் 'மூன்று குவிமாடம் உடைய கட்டிடம்' என்று குறிப்பிட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.
  • பாபர் மசூதி இடிப்பு என்பது மிகப்பெரிய குற்றச்செயல் என்று உச்ச நீதிமன்றம் கூறியதை குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) பாடப் புத்தகத்தில் பாபர் மசூதி பெயர் 'மூன்று குவிமாடம் உடைய கட்டிடம்' என்று குறிப்பிட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.

கடந்த வாரம் வெளியான 12-ம் வகுப்புக்கான புதிய அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்தில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட வரலாறு மறைக்கப்பட்டு, உச்சநீதிமன்ற தீர்ப்பு அனைத்து சமூகத்தாலும் கொண்டாடப்பட்டது என்று இடம்பெற்றுள்ளது.

குஜராத்தில் இருந்து அயோத்தி வரை பாஜக நடத்திய ரதயாத்திரை, 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்பு நடந்த வன்முறை மற்றும் அதன் பின்பு பாஜக ஆளும் மாநிலங்களில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது போன்ற வரலாற்று தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன.

இத்தகைய மாற்றங்கள் தொடர்பாக பேசிய என்.சி.இ.ஆர்.டி தலைவர் தினேஷ் பிரசாத் சக்லானி, "இளம் மாணவர்களுக்கு கலவரங்களை கற்றுக் கொடுக்க வேண்டுமா? சமூகத்தில் அவர்கள் வெறுப்பை உருவாக்கவோ வெறுப்புக்கு ஆளாகவோ கற்றுக் கொடுக்க வேண்டுமா? வளர்ந்த பிறகு அவர்களே தெரிந்து புரிந்து கொள்வார்கள். கல்வியின் நோக்கம் வன்முறையைத் தூண்டுவதல்ல. எல்லா விஷயங்களும் பாடத்திட்டத்தில் இருக்க வேண்டியதில்லை" என்று தெரிவித்தார்.

என்.சி.இ.ஆர்.டி தலைவரின் இந்த பொறுப்பற்ற பதில் சமூக வலைத்தளங்களில் கண்டனத்துக்கு உள்ளது. இது வரலாற்றை மறைத்து திரிக்கும் செயல் என்று விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஹைதராபாத் எம்.பி ஒவைசி, " பாபர் மசூதி இடிப்பு என்பது மிகப்பெரிய குற்றச்செயல் என்று உச்ச நீதிமன்றம் கூறியதை இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளும் தெரிந்து கொள்ள வேண்டும். 1949 ஆம் ஆண்டு பாபர் மசூதி இழிவுபடுத்தப்பட்டு, 1992 ஆம் ஆண்டு மசூதி இடிக்கப்பட்டதை இந்தியாவில் உள்ள குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டும். குற்ற செயல்களைக் கொண்டாடும் வகையில் குழந்தைகள் வளரக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News