உச்ச நீதிமன்றத்திற்கு 5 நீதிபதிகள் நியமனம்- பரிந்துரை செய்தது கொலிஜியம்
- உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் உள்ள 34 நீதிபதிகளில் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- தற்போது உள்ள 28 நீதிபதிகளில் 9 பேர் 2023ல் ஓய்வு பெற உள்ளனர்
புதுடெல்லி:
உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பணியமர்த்துவதற்காக உயர் நீதிமன்றங்களில் பணியாற்றும் 5 நீதிபதிகளின் பெயர்களை உச்ச நீதிமன்ற கொலிஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதிகளில் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களை நிரப்புவது தொடர்பாக இன்று தலைமை நீதிபதி தலைமையில் நடைபெற்ற கொலிஜியம் குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனையின் முடிவில், பீகார், ராஜஸ்தான், மணிப்பூர், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களில் பணியாற்றும் 5 நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி.வி.சஞ்சய் குமார், பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அசானுதீன் அமானுல்லா, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகிய 5 நீதிபதிகளின் பெயர்கள் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக அதிகரிக்கும். ஒரு இடம் மட்டுமே காலியாக இருக்கும்.
உச்ச நீதிமன்றத்தில் தற்போது உள்ள 28 நீதிபதிகளில் 9 பேர் 2023ல் ஓய்வு பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.