அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு நிபந்தனையுடன் இடைக்கால ஜாமின்
- அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டரிடம் ரூ. 20 லட்சம் லஞ்சம வாங்கியபோது கைது.
- கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்ட அங்கித் திவாரி, மதுரை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டரான சுரேஷ்பாபுவிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கடந்த டிசம்பர் 1-ம் தேதி கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கைதை தொடர்ந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணை நீதிமன்றத்தில் அங்கித் திவாரி ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தார். ஆனால், நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்க மறுத்துவிட்டது.
பின்னர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் ஜாமின் மனுதாக்கல் செய்தார். உயர்நீதிமன்றமும் ஜாமின் வழங்க மறுத்துவிட்டது.
இதனைத்தொடர்ந்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவருடைய ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவருக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் இடைக்கால ஜாமின் வழங்கியது. அனுமதி பெறாமல் தமிழகத்தை விட்டு வெளியேறக்கூடாது, சாட்சியங்கள் மீது ஆதிக்கம் செலுத்த கூடாது, சாட்சியங்களை அழிக்கக் கூடாது போன்ற நிபந்தனைகளை விதித்துள்ளது.