இந்தியா

டெல்லி அதிகாரம்.. மத்திய அரசின் அரசாணையை நிறுத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

Published On 2023-07-10 11:55 GMT   |   Update On 2023-07-10 11:55 GMT
  • டெல்லி அரசின் நிர்வாக அதிகாரத்தை பறிக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது.
  • அதிகாரிகள் நியமனம் மற்றும் மாறுதல் விவகாரத்தில் பரிந்துரை செய்வதற்கான அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது.

புதுடெல்லி:

டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நீண்டகாலமாக அதிகாரப் போட்டி நிலவுகிறது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத் தான் அதிக அதிகாரம் இருப்பதாக தீர்ப்பு அளித்தது. ஆனால், இந்த தீர்ப்பை நிராகரிக்கும் வகையில், டெல்லி அரசின் நிர்வாக அதிகாரத்தை பறிக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது.

தேசிய தலைநகர குடிமைப் பணி ஆணையத்தை (என்சிசிஎஸ்ஏ) உருவாக்குவதற்கான இந்த அவசர சட்டம், டெல்லி அரசின் ஏ பிரிவு அதிகாரிகள் மற்றும் டெல்லி, அந்தமான் நிகோபார், லட்சத்தீவுகள், டாமன் டையு, தாத்ரா நாகர் ஹவேலி யூனியன் பிரதேசங்களின் குடிமைப் பணி (டிஏஎன்ஐசிஎஸ்) பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் நியமனம் மற்றும் மாறுதல் விவகாரத்தில் பரிந்துரை செய்வதற்கான அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது.

இந்த அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியின் ஆம் ஆத்மி அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் அவசர சட்டத்தை நிறுத்திவைக்க உச்ச நீதிமனற்ம் மறுத்துவிட்டது.

அதேசமயம், பதில் மனு தாக்கல் செய்யும்படி டெல்லி துணைநிலை ஆளுநருக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தலைமை நீதிபதி தெரிவித்தார். வழக்கு விசாரணை அடுத்த திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அப்போது கெஜ்ரிவால் அரசால் பல்வேறு துறைகளில் நியமிக்கப்பட்ட 400 நிபுணர்களை கவர்னர் பணிநீக்கம் செய்தது தொடர்பான டெல்லி அரசின் மனுவையும் உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

Tags:    

Similar News