சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் பதாதைகளுடன் போராட்டம்
- உள்துறை அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் சஸ்பெண்ட்.
- பிரதமர் மோடி, அமித் ஷா ஏன் மவுனம் காக்கிறார்கள் என கேள்வி எழுப்பி போராட்டம்.
பாராளுமன்றத்திற்கு வெளியேயும், பாராளுமன்றத்தின் மக்களவைக்கு உள்ளேயும் வண்ண புகை குண்டு தாக்குதல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள். இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தீர்மானம் நிறைவேற்று கனிமொழி உள்பட 13 எம்.பி.க்கள் மக்களவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் அவர்கள் கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாது. அதேபோல் மாநிலங்களைவில் ஒரு எம்.பி. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களது கைகளில் பதாதைகள் ஏந்தி நின்று எதிர்ப்பை தெரிவித்தனர்.
அந்த பதாதைகளில் குற்றவாளிகள் உள்ளே உள்ளனர். பேசியதற்காக நாங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளோம். நாட்டு மக்கள் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். பா.ஜனதா எம்.பி. மீது ஏன் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. பிரதமர் மோடி, அமித் ஷா ஏன் மவுனம் காக்கிறார்கள் போன்ற வாசகங்கள் இடம் பிடித்திருந்தனர்.
பின்னர் பாராளுமன்ற நுழைவாயில் படிக்கட்டில் நின்று போராட்டம் நடத்தினர். அப்போது காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும், பாராளுமன்ற இரு அவைகளின் காங்கிரஸ் உறுப்பினர்களின் தலைவருமான சோனியா காந்தி போராட்டத்தில் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.