ஸ்வாதி மாலிவால் மீது போலீசில் புகார் அளித்த பிபவ் குமார்
- டெல்லி முதல் மந்திரியின் தனிச்செயலர் தாக்கியதாக ஆம் ஆத்மி பெண் எம்.பி. குற்றச்சாட்டு.
- ஆம் ஆத்மி கட்சி வீடியோ பதிவை வெளியிட்டு சதி என பா.ஜ.க.வை குற்றம்சாட்டியது.
புதுடெல்லி:
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யான ஸ்வாதி மாலிவால், கெஜ்ரிவால் வீட்டில் அவரது தனிச்செயலாளரால் தாக்கப் பட்டேன் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்வாதி மாலிவால் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அப்போது, பிபவ் குமார் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, கெஜ்ரிவால் வீட்டில் வைத்து ஸ்வாதி மாலிவால் தாக்கப்படவில்லை. இது பா.ஜ.க.வின் சதி என ஆம் ஆத்மி கட்சியின் மந்திரி அதிஷி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அதிஷி கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்ததில் இருந்து பா.ஜ.க. கலக்கம் அடைந்துள்ளது. இதனால் ஸ்வாதி மாலிவாலை கெஜ்ரிவால் வீட்டிற்கு கடந்த 13-ம் தேதி அனுப்பி பா.ஜ.க. சதித்திட்டம் வகுத்துள்ளது. முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை குற்றம்சாட்ட வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். ஆனால், அவர் அங்கே இல்லை என்பதால் அவர் பாதுகாக்கப்பட்டார். பா.ஜ.க.வின் இந்த சதியில் ஸ்வாதி மாலிவால் பயன்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.
இந்நிலையில், முதல் மந்திரி கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பிபவ் குமார், ஸ்வாதி மாலிவால் மீது சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்தப் புகாரில், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. தவறான அழுத்தத்தை உருவாக்கும் முயற்சியில் என்னை சிக்கவைக்க முயன்றார். மே 13 அன்று டெல்லி முதல் மந்திரி இல்லத்திற்குள் பலவந்தமாகவும், அங்கீகரிக்கப்படாமலும் நுழைந்துள்ளார். ஒரு குழப்பத்தை உருவாக்கி என்னை தாக்க முயன்றார் என குறிப்பிட்டுள்ளார்.