தமிழகத்தில் 8 நகரங்கள் உள்பட 22 நகரங்கள் அடுத்த மாதம் 'ஸ்மார்ட் சிட்டி'களாக தரம் உயரும்- பணிகள் முடியும் தருவாயை எட்டியது
- 100 நகரங்களை ‘ஸ்மார்ட் சிட்டி’களாக மாற்றும் திட்டத்தை கடந்த 2015-ல் மத்திய அரசு தொடங்கி வைத்தது.
- 78 நகரங்களின் பணியும் இன்னும் 4 மாதங்களுக்குள் செய்துமுடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் ஆக்ரா, வாரணாசி, அகமதாபாத், சென்னை, கோவை உள்பட 100 நகரங்களை 'ஸ்மார்ட் சிட்டி'களாக மாற்றும் திட்டத்தை கடந்த 2015-ல் மத்திய அரசு தொடங்கி வைத்தது.
இந்த திட்டத்தின் கீழ் கட்டமைப்பு வசதிகள், சுற்றுப்புற சூழல், மக்கள் வாழ்க்கைக்கு தேவையான நவீன வசதிகள் அனைத்தும் செய்யப்படும்.
முதற்கட்டமாக தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், ஈரோடு, வேலூர் ஆகிய 8 நகரங்கள் மற்றும் போபால், இந்தூர், வாரணாசி, ஆக்ரா உள்பட 22 நகரங்களின் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.
அடுத்தமாதம் (ஏப்ரல்) இந்த 22 நகரங்களும் ஸ்மார்ட் சிட்டிகளாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 78 நகரங்களின் பணியும் இன்னும் 4 மாதங்களுக்குள் செய்துமுடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரூ.1 லட்சத்து 81 ஆயிரத்து 322 கோடி மதிப்பீட்டில் 7 ஆயிரத்து 804 பணிகள் தேர்வு செய்யப்பட்டது. அதில் 5,246 பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த திட்டங்களை நிறைவேற்ற இதுவரை ரூ.36,447 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதில் ரூ.32,095 கோடி செலவிட்டு 88 சதவீத பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.