சாக்லேட் தருவதாக அழைத்து சென்று 10வயது சிறுமி கற்பழித்து கொலை- டியூசன் ஆசிரியர் கைது
- டியூசனுக்கு சென்று விசாரித்தபோது ஆசிரியர் காந்தராஜின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
- டியூசன் அருகே உள்ள தனியார் கட்டிடத்தின் தண்ணீர் தொட்டியில் சிறுமி பிணமாக மிதந்தது தெரியவந்தது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மலவள்ளி டவுனை சேர்ந்த சுரேஷ்குமார்-அஸ்வினி தம்பதியின் மகள் திவ்யா (வயது10). இந்த சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள்.
பள்ளி முடிந்து தினமும் அதேப்பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியரான காந்தராஜ் (வயது 50) என்பவரிடம் டியூசன் படிப்பது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் சிறுமி டியூசனுக்கு சென்றாள். இரவு நீண்ட நேரமாகியும் சிறுமி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் டியூசனுக்கு சென்று விசாரித்தனர்.
அப்போது ஆசிரியர் காந்தராஜ் சிறுமி வீட்டிற்கு சென்று விட்டதாக கூறினார். இதனால் அவர்கள் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடினர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால் மலவள்ளி போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். டியூசனுக்கு சென்று விசாரித்தபோது ஆசிரியர் காந்தராஜின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இந்த வேளையில் டியூசன் அருகே உள்ள தனியார் கட்டிடத்தின் தண்ணீர் தொட்டியில் சிறுமி பிணமாக மிதந்தது தெரியவந்தது.
இதையடுத்து சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து டியூசன் ஆசிரியர் காந்தராஜிடம் விசாரித்த போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார்.
இதையடுத்து அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
டியூசனுக்கு வந்த சிறுமியை ஆசிரியர் காந்தராஜ் சாக்லெட் தருவதாக கூறி அருகே உள்ள தனியார் கட்டிடத்திற்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி சத்தம் போட்டார்.
மேலும் நடந்த சம்பவத்தை சிறுமி வெளியே கூறி விடுவாள் என்று பயந்து மூச்சை திணறடித்து கொலை செய்துள்ளார். பின்னர் உடலை கட்டிடத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் வீசிவிட்டு ஒன்று தெரியாததுபோல் இருந்துள்ளார்.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே ஆத்திரமடைந்த சிறுமியின் குடும்பத்தினர் இந்த கொலையை கண்டித்து நேற்று மலவள்ளி டவுன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.