வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து நகை தொழிலாளி வீட்டில் 300 கிராம் நகை கொள்ளை
- பல சினிமாக்களில் கொள்ளையில் ஈடுபடும் கும்பல் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து ஏமாற்றும் சம்பவங்கள் இடம் பெற்றிருக்கும்.
- போலீசார் சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்து அதிகாரிகள் போல் நடித்து நகை-பணத்தை கொள்ளை அடித்து சென்ற கும்பலை தேடி வருகிறார்கள்.
திருவனந்தபுரம்:
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சய். நகை தொழிலாளி. இவர் கேரள மாநிலம் கொல்லத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்து நகை தொழில் செய்து வருகிறார். நேற்று இவரது வீட்டுக்கு 4 பேர் சென்றனர்.
அவர்கள் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என்று அறிமுகம் செய்து கொண்டனர். பின்னர் சஞ்சயிடம் வீட்டை சோதனை செய்ய வேண்டும் எனக்கூறி தங்களின் அடையாள அட்டையை காட்டினர்.
இதையடுத்து அவர்கள் சஞ்சய் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் பீரோவில் இருந்த 300 கிராம் தங்கம் மற்றும் ரொக்கப்பணம் ரூ.1.80 லட்சத்தையும் எடுத்து கொண்டனர்.
கொச்சியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு வந்து ஆதாரங்களை காட்டி பணத்தையும், நகையையும் பெற்று கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றனர்.
அவர்கள் போகும் போது வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமிராவின் டிஸ்குகளையும் எடுத்து சென்றனர். இதனால் சந்தேகம் அடைந்த சஞ்சய் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து விசாரணை நடத்திய பின்னரே சஞ்சய் வீட்டுக்கு வந்தவர்கள் கொள்ளை கும்பல் என தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்து அதிகாரிகள் போல் நடித்து நகை-பணத்தை கொள்ளை அடித்து சென்ற கும்பலை தேடி வருகிறார்கள்.