ஜம்முவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு- 6 பேர் படுகாயம்
- வெடித்த குண்டுகளின் மாதிரிகளை சேகரித்து சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
- குண்டு வெடிப்பையொட்டி நர்வால் பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஆனாலும் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் அவ்வப்போது பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக பண்டிட்டுகள் மற்றும் காஷ்மீரில் பணிபுரிந்து வரும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இன்று காலை அங்குள்ள நர்வால் பகுதியில் அடுத்தடுத்து 2 இடங்களில் ரோட்டோரம் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுபற்றி அறிந்ததும் பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த பகுதி முழுவதையும் பாதுகாப்பு படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் அங்கு வரைவழைக்கப்பட்டனர்.
அவர்கள் குண்டுவெடிப்பு நடந்த பகுதி முழுவதும் தீவிர வெடிகுண்டு சோதனை நடத்தினார்கள். வெடித்த குண்டுகளின் மாதிரிகளை சேகரித்து சோதனைக்காக அனுப்பி வைத்தனர். குண்டு வெடிப்பையொட்டி நர்வால் பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். தீவிர வாகன சோதனையும் நடந்து வருகிறது.
இந்த நாசவேலையில் ஈடுபட்ட தீவிரவாத கும்பல் யார்? என்று தெரியவில்லை. எந்த அமைப்பும் இதற்கு பொறுப்பேற்கவில்லை. குடியரசு தினத்துக்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில் அடுத்தடுத்து நடந்த இந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம் ஜம்மு- காஷ்மீரில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்கு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.