இந்தியா

பக்தர்கள் மேல் விழுந்த மரத்தை அகற்றும் பணி நடந்த போது எடுத்த படம்.

பலத்த மழையால் பழமையான வேப்ப மரம் முறிந்து விழுந்து 7 பக்தர்கள் பலி- 40 பேர் படுகாயம்

Published On 2023-04-10 03:54 GMT   |   Update On 2023-04-10 03:54 GMT
  • கோவிலில் வழிபாடு நடந்து கொண்டிருந்த போது பாலபூர் தேசில் பகுதியில் திடீரென மழை பெய்தது, சிறிது நேரத்தில் மழை வலுத்தது.
  • சூறைக்காற்றில் கோவில் முன்பு இருந்த வேப்ப மரம் பலத்த சத்தத்துடன் தகர கொட்டகை மீது சரிந்து விழுந்தது.

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தில் உள்ள பாலபூர் தேசில் பகுதியில் பிரசித்தி பெற்ற பாபுஜி மகராஜ் மந்திர் சன்ஸ்தான் உள்ளது.

இக்கோவிலுக்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் வழிபாடுக்கு வருவது வழக்கம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடப்பது வழக்கம். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான மக்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் மாலை நேர வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

இக்கோவிலின் முன்பு தகர கொட்டகை ஒன்று போடப்பட்டு உள்ளது. அதன் அருகே மிகவும் பழமையான வேப்பமரம் ஒன்று இருந்தது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் வழிபாட்டு நேரத்தில் தகர கொட்டகையில் அமர்ந்து ஓய்வெடுப்பது வழக்கம்.

நேற்று வழிபாடு நடந்து கொண்டிருந்த போது பாலபூர் தேசில் பகுதியில் திடீரென மழை பெய்தது, சிறிது நேரத்தில் மழை வலுத்தது. அப்போது சூறைக்காற்றும் வீசியது. இதனால் கோவிலுக்கு முன்பு நின்ற வேப்ப மரம் பேயாட்டம் ஆடியது. இதை கண்டு கோவிலுக்கு வந்த பக்தர்கள் தகர கொட்டகையில் ஒதுங்கினர்.

100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தகர கொட்டகைக்குள் நெருக்கியடித்த படி நின்றனர். அப்போது வீசிய சூறைக்காற்றில் கோவில் முன்பு இருந்த வேப்ப மரம் பலத்த சத்தத்துடன் தகர கொட்டகை மீது சரிந்து விழுந்தது.

இதில் தகர கொட்டகை இடிந்து விழுந்தது. அதனுள் நின்ற மக்கள் அனைவரும் தகர கொட்டகைக்குள்ளும், மரத்தின் அடியிலும் சிக்கி கொண்டனர். இதனை கண்டு கோவிலுக்கு உள்ளே இருந்த பக்தர்கள் அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்தனர். அவர்கள் மரத்தின் அடியில் சிக்கி கொண்ட பக்தர்களை மீட்க முயன்றனர்.

மேலும் இதுபற்றி தீயணைப்பு நிலையத்தினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் ஜே.சி.பி. எந்திரங்களுடன் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றினர். விடிய, விடிய இந்த மீட்பு பணி நடந்தது.

இந்த விபத்தில் மரத்தின் அடியில் சிக்கி கொண்ட 7 பேர் பரிதாபமாக இறந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அகோலா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் பற்றி தெரியவந்ததும் மகாராஷ்டிரா துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அகோலா மாவட்ட நிர்வாகத்தை அழைத்து விபரம் கேட்டார். பின்னர் மீட்பு பணிகளை முடுக்கி விடும்படி அறிவுறுத்தினார். பாதிக்கப்பட்ட பக்தர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்தார்.

இந்த விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்த அவர், பக்தர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் கிடைக்க முதல் மந்திரி ஏக்நாத் சின்டே நடவடிக்கை எடுப்பார் எனவும் கூறினார்.

Tags:    

Similar News