விமானத்தில் சிறுநீர் கழித்தவருக்கு ஜாமீன் மறுப்பு: டெல்லி கோர்ட்டு உத்தரவு
- சங்கர் மிஸ்ரா 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
- குற்றம் சாட்டப்பட்டவரின் செயல் முற்றிலும் அருவருப்பானது மற்றும் வெறுக்கத்தக்கது.
புதுடெல்லி :
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து கடந்த நவம்பர் 26-ந்தேதி டெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் ஒரு மூதாட்டி மீது சக பயணி ஒருவர் சிறுநீர் கழித்தார்.
இந்த சம்பவம் சமீபத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மூதாட்டி அளித்த புகாரின் பேரில் டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து, சங்கர் மிஸ்ரா (வயது 34) என்ற அந்த தொழிலதிபரை பெங்களூருவில் கைது செய்தனர்.
டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் சங்கர் மிஸ்ரா, ஜாமீன் கேட்டு டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி கோமல் கார்க், அவருக்கு ஜாமீன் மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவரின் செயல் முற்றிலும் அருவருப்பானது மற்றும் வெறுக்கத்தக்கது என கூறிய நீதிபதி, மக்களின் உணர்வை பாதிக்கக்கூடியது என்றும் சுட்டிக்காட்டினார்.