ஆந்திராவில் ரூ.40 லட்சம் செம்மரக்கட்டை பறிமுதல்- 16 பேர் கைது
- திப்பிரெட்டிப்பள்ளி பகுதியில் திருப்பதி செம்மர கடத்தல் தடுப்பு அதிரடிப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிதர் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- சிலர் செம்மரக்கட்டைகளை வெட்டி தலை மற்றும் தோளில் தூக்கி செல்வது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம் கடப்பா அடுத்த வாணிபெண்டா வனசரகத்திற்கு உட்பட்ட திப்பிரெட்டிப்பள்ளி பகுதியில் திருப்பதி செம்மர கடத்தல் தடுப்பு அதிரடிப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிதர் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சிலர் செம்மரக்கட்டைகளை வெட்டி தலை மற்றும் தோளில் தூக்கி செல்வது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் அனந்தபுரம் மாவட்டம், கதிரியை சேர்ந்த மேகலநாகமல்லப்பா ( வயது 47), தண்டிசூரி (32), கடப்பா அடுத்த காஜிப்பேட்டை சேர்ந்த நாகேஷ்(54), நாகேஸ்வரராவ்(32), சீனிவாசலு (57), தேவல்லாசுப்பராயடு(39), தம்மிஷெட்டி வெங்கடசுப்பையா (34), ஸ்ரீபதி பிரதீபால் (21), ஸ்ரீ ராம ராஜசேகர் (34), ஸ்ரீ ராம ஜஸ்வா (25), மாமிளா நாகேந்திரா (25), இல்லூர் வினோத் (20), மல்லேலபொயினா வெங்கடேசம் (46), சத்யசாய் அடுத்த கலம் பேட்டையை சேர்ந்த எம்பாலிசேஷாத்ரி (37) என்பதும், இவர்கள் செம்மரக்கட்டைகள் கடத்தியதும் தெரிய வந்தது.
அவர்களை கைது செய்த போலீசார், 17 செம்மரக்கட்டைகள், லோடு ஆட்டோ, 2 பைக் மற்றும் 17 கோடாரி உள்ளிட்டவர்களை பறிமுதல் செய்தனர்.
அன்னமய்யா மாவட்டம், ராஜாம்பேட்டை அடுத்த சிப்பகொண்டி டோனா பகுதியில் செம்மரக்கடைகளை கடத்தி வந்த திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமுத்தூர் அடுத்த மோளையனூர் கிராமத்தை சேர்ந்த சிவராஜ் (30), குடத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிவமணி (45) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
இதன் மொத்த மதிப்பு ரூ.40 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.