இந்தியா

பி.பி.சி. அலுவலகங்களில் 2வது நாளாக தொடரும் வருமானவரி சோதனை

Published On 2023-02-15 06:56 GMT   |   Update On 2023-02-15 06:56 GMT
  • வருமான வரித்துறையின் இந்த ஆய்வுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக பி.பி.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
  • பி.பி.சி. அலுவலகங்களில் வருமானவரி சோதனைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

லண்டனை மையமாக கொண்ட பி.பி.சி. நிறுவனம் குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பாக 2 ஆவண படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. குஜராத் கலவரத்தின்போது நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்தார்.

இந்த பின்னணியில் ஆவணப்படம் வெளியாகி இருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. மத்திய அரசு இந்த ஆவண படத்துக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது.

இந்தநிலையில் டெல்லி, மும்பையில் உள்ள பி.பி.சி. அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காலை 11 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு வரை நடந்தது. இன்று 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையின்போது அதிகாரிகள் செல்போன்கள், லேப்டாப்களை பறிமுதல் செய்தனர். 2012ம் ஆண்டின் வரவு- செலவு கணக்குகள் அனைத்தையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

வருமான வரித்துறையின் இந்த ஆய்வுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக பி.பி.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சோதனை காரணமாக ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்யும்படி பி.பி.சி. நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. அதிகாரிகளின் கேள்விகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கு மாறும் கேட்டுக்கொண்டு உள்ளது.

பி.பி.சி. அலுவலகங்களில் வருமானவரி சோதனைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Tags:    

Similar News