ஆந்திராவில் இருந்து சபரிமலை சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து- குழந்தை உள்பட 18 பேர் படுகாயம்
- ஆந்திராவில் இருந்து சபரிமலைக்கு ஏராளமான பக்தர்களை ஏற்றி கொண்டு ஒரு பஸ் சென்றது.
- பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 16-ந்தேதி மாலையில் திறக்கப்பட்டது.
17-ந்தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். நடை திறந்த முதல் நாளிலேயே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா உள்பட பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்து ஐய்யப்ப பக்தர்கள் இருமுடி கட்டி சென்ற வண்ணம் உள்ளனர்.
ஆந்திராவில் இருந்து சபரிமலைக்கு ஏராளமான பக்தர்களை ஏற்றி கொண்டு ஒரு பஸ் சென்றது. இன்று அதிகாலை அந்த பஸ் பத்தினம்திட்டாவை அடுத்த லாகா அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
இதில் பஸ்சில் இருந்த ஐய்யப்ப பக்தர்கள் அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே தகவல் அறிந்து போலீசாரும், மீட்பு படையினரும் விரைந்து வந்தனர்.
விபத்தில் பஸ்சில் இருந்த குழந்தை உள்பட 18 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு பத்தினம்திட்டா அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.