7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்: பா.ஜ.க 4 இடங்களில் முன்னணி
- 4 சுற்றுகள் முடிவில் பாஜக வேட்பாளர் சூரஜ் 3261 ஓட்டுகள் முன்னிலையில் இருந்தார்.
- 18 சுற்றுகள் முடிவில் பாஜக அந்த தொகுதியில் 1,700 ஓட்டுகள் கூடுதல் பெற்று பின்னர் இழுபறி காணப்பட்டது.
6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 3ம் தேதி நடந்தது. பீகாரில் உள்ள கோபால் கஞ்ச், மொகாமா, மராட்டியத்தில் இருக்கும் அந்தேரி கிழக்கு, அரியானாவில் ஆதம்பூர், தெலுங்கானாவில் முனுகோடு, ஒடிசாவில் தாம்நகர், உத்தரபிரதேசத்தில் கோலா கோகர்நாத் ஆகிய 7 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது.
பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியளவில் எண்ணப்பட்டன. 7 தொகுதிகளில் பாஜக 4 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தேஜஸ்வி யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சந்திரசேகர் ராவின் டி.ஆர்.எஸ். ஆகியவை தலா 1 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
அரியானா மாநிலம் ஆதம்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், முன்னாள் முதல்-மந்திரி பஜன் லாலின் மகனுமான குல்தீப் பிஷ்னோய் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் இணைந்ததால் அங்கு தேர்தல் நடந்தது.
இங்கு பாஜக சார்பில் பாவ்யா பிஷ்னோய், காங்கிரஸ் சார்பில் ஜெய்பிரகாஷ் போட்டியிட்டனர். இதில் தொடக்கத்தில் இருந்தே பாவ்யா முன்னிலையில் இருந்தார். 13 சுற்றுகள் முடிவில் பாஜக 10,913 ஓட்டுகள் கூடுதல் பெற்று முன்னிலையில் இருந்தது. காங்கிரசிடம் இருந்து அந்த தொகுதியை பாஜக கைப்பற்றுகிறது.
உத்தரபிரதேசம் மாநிலம் கோலா கோகர்நாகத் தொகுதியில் பாஜக வேட்பாளர் அமன் கிரி 28 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
18 சுற்றுகள் முடிவில் கிரி 73,371 ஓட்டுகளும், சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் வினய் திவாரி 48,734 ஓட்டுகளும் பெற்று இருந்தார். இதன் மூலம் பாஜக அந்த தொகுதியை தக்க வைத்து கொள்கிறது.
ஒடிசா மாநிலத்தில் பிஜி ஜனதா தளம் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள தாம்நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. இந்த தொகுதியில் தொடக்கத்தில் இருந்தே பாஜக முன்னிலையில் இருக்கிறது.
4 சுற்றுகள் முடிவில் பாஜக வேட்பாளர் சூரஜ் 3261 ஓட்டுகள் முன்னிலையில் இருந்தார். அவர் 18,181 ஓட்டுகளும், பிஜூ ஜனதா தள வேட்பாளர் அபந்தி தாஸ் 14,920 ஓட்டுகளும் பெற்று இருந்தனர். இந்த தொகுதியை பாஜக தக்க வைத்துக் கொள்கிறது.
பீகார் மாநில மொகாமா தொகுதி ராஷ்டீரிய ஜனதா தளம் எம்.எல்.ஏ. அனந்த்சிங் ஆயுத தடை சட்டத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அந்த தொகுதியில் ராஷ்டீரிய ஜனதா தளம் சார்பில் ஆனந்த்சிங் மனைவி நீலம் தேவியும், பாஜக சார்பில் சோனா தேவியும் போட்டியிட்டனர்.
இந்த தொகுதியில் நீலம் தேவி வெற்றி பெற்றார். இதன் மூலம் அந்த தொகுதியை ராஷ்டீரிய ஜனதா தளம் தக்க வைத்து கொண்டது. 20 சுற்றுகள் முடிவில் நீலம் தேவி 16 ஆயிரம் ஓட்டுகள் கூடுதல் பெற்று இருந்தார். அதன் பிறகு அவர் மேலும் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
பீகார் மாநிலத்தில் உள்ள மற்றொரு தொகுதியான கோபால் கஞ்சில் கடும் போட்டி நிலவுகிறது. தொடக்கத்தில் ராஷ்டீரிய ஜனதா தளம் வேட்பாளர் மோகன் குப்தா முன்னிலையில் இருந்தார்.
பின்னர் பாஜக வேட்பாளர் சூசும் தேவி முன்னிலை பெற்றார். மாறி மாறி இழுபறி நிலை காணப்பட்டது. 18 சுற்றுகள் முடிவில் பாஜக அந்த தொகுதியில் 1,700 ஓட்டுகள் கூடுதல் பெற்று பின்னர் இழுபறி காணப்பட்டது.
பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகி நிதிஷ்குமார் மெகா கூட்டணியில் இணைந்த பிறகு சந்தித்த முதல் இடைத்தேர்தல் இதுவாகும்.
மராட்டிய மாநிலம் அந்தோரி கிழக்கு தொகுதியில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி முன்னிலையில் உள்ளது. இங்கு பாஜக போட்டியிடவில்லை. சிவசேனா வேட்பாளரும், மறைந்த எம்.எல்.ஏ.வின் மனைவியுமான ருதுஜா 29 ஆயிரம் ஓட்டுகள் கூடுதல் பெற்று முன்னிலையில் உள்ளார். இந்த தொகுதியை உத்தவ் தாக்கரே தக்க வைத்து கொள்கிறார்.
தெலுங்கானா மாநிலம் முனுகோட் தொகுதியில் ஆளும் டி.ஆர்.எஸ். தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சிக்கும், பா.ஜனதாவுக்கு இடையேவும் கடும் இழுபறி ஏற்பட்டது. இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை பெற்றன. 5-வது சுற்று முடிவில் டி.ஆர்.எஸ். முன்னிலையில் உள்ளது.