இந்தியாவில் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு... மத்திய மந்திரி நட்டா தகவல்
- புற்றுநோய்க்காக 131 அத்தியாவசிய மருந்துகள் அட்டவணை 1-ல் பட்டியலிடப்பட்டு உள்ளன.
- நாட்டில் கடந்த 2014-ம் ஆண்டில் 387 ஆக இருந்த மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 731 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவையில் நேற்று உறுப்பினர்களின் துணை கேள்விகளுக்கு சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா பதிலளித்து பேசினார்.
முக்கியமாக, புற்றுநோய் தொடர்பான கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடு முழுவதும் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் 2.5 சதவீதம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 15.5 லட்சம் புற்றுநோயாளிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.
இதில், ஆண்களில் பெரும்பாலும் வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோயும், பெண்களில் மார்பக புற்றுநோயும் காணப்படுகிறது.
புற்றுநோய்க்காக 131 அத்தியாவசிய மருந்துகள் அட்டவணை 1-ல் பட்டியலிடப்பட்டு உள்ளன. அவை கண்காணிக்கப்பட்டு அரசால் விலை நிர்ணயிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் பொதுவாக பயன்படுத்தும் மருந்துகள் ஆகும்.
இந்த பட்டியலில் இல்லாத 28 கலவைகளும் உள்ளன. தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் மற்றும் அரசும் அவற்றின் விலையைக் கட்டுப்படுத்தியுள்ளன.
இவ்வாறு புற்றுநோய்க்கான மருந்துகள் மலிவு விலையில் கிடைப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதனால் சுமார் ரூ.294 கோடி வரை புற்றுநோயாளிகளுக்கு மிச்சமாகிறது.
இதைப்போல குறைந்த செலவில் புற்றுநோய்க்கான சிகிச்சை பெறுவதையும் உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டில் கடந்த 2014-ம் ஆண்டில் 387 ஆக இருந்த மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 731 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
மருத்துவக்கல்வி இடங்களின் எண்ணிக்கையும் 51,348-ல் இருந்து 1.12 லட்சமாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. மருத்துவ உயர்கல்விக்கான இடங்களும் 31,185-ல் இருந்து 72,627 ஆகி இருக்கிறது.
மருத்துவக்கல்வியின் தரத்திலும் அளவிலும் சமநிலை இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் எங்களால் முடிந்தவரை விரைவாக செல்ல முயற்சிக்கிறோம். அதே நேரத்தில் மருத்துவர்களின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பவில்லை.
இவ்வாறு ஜே.பி.நட்டா கூறினார்.