இந்தியா

டெல்லியில் நடந்த யாத்திரையில் ராகுல்காந்திதான் பாதுகாப்பு விதிமுறைகளை மீறினார்- மத்திய ரிசர்வ் போலீஸ் படை குற்றச்சாட்டு

Published On 2022-12-29 09:35 GMT   |   Update On 2022-12-29 09:35 GMT
  • பஞ்சாப், காஷ்மீரில் நடைபெறும் பாதயாத்திரையில் ராகுல்காந்திக்கு பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும்.
  • காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு சி.ஆர்.பி.எப். (மத்திய ரிசர்வ் போலீஸ் படை) அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் டெல்லியில் நடந்த யாத்திரையின்போது பாதுகாப்பு குளறுபடிகள் ஏற்பட்டது.

பல இடங்களில் பாதுகாப்பு சமரசம் செய்து கொள்ளப்பட்டது. யாத்திரையில் சட்டவிரோதமாக விஷமிகள் நுழைந்தனர் என்றும் பஞ்சாப், காஷ்மீரில் நடைபெறும் பாதயாத்திரையில் ராகுல்காந்திக்கு பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணு கோபால் கடிதம் எழுதினார்.

இந்த நிலையில் காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு சி.ஆர்.பி.எப். (மத்திய ரிசர்வ் போலீஸ் படை) அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:-

ராகுல் காந்திக்கு வழிகாட்டுதல்களின்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் நடந்த யாத்திரையின்போது ராகுல்காந்தியே பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மீறினார்.

பல சந்தர்ப்பங்களில் ராகுல்காந்தியின் தரப்பில் வழிகாட்டுதல்களை மீறுவது கவனிக்கப்பட்டது. அதுபற்றி அவருக்கு அவ்வப்போது தெரிவிக்கப்பட்டது.

2020-ம் ஆண்டு முதல் ராகுல் காந்தியால் 113 பாதுகாப்பு வழிகாட்டுதல் மீறல்கள் நடந்துள்ளன.

பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்படுகின்றன. ராகுல்காந்தி பாதுகாப்பு குறித்து அதிகாரிகள்தரப்பில் போதிய பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News