விண்ணில் செலுத்தப்பட்டது சந்திரயான்-3: லைவ் அப்டேட்ஸ்
- 40 நாள் பயணத்துக்கு பிறகு ஆகஸ்டு 23-ந் தேதி நிலவில் சந்திரயான்-3 விண்கலத்தை தரை இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்.
- விண்கலகத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் பெங்களூரு உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள தங்களது கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து கண்காணிப்பார்கள்.
சந்திரயான்-3 விண்கலத்தை ரூ.615 கோடியில் இஸ்ரோ வடிவமைத்தது. இந்த விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்.வி.எம்.-3 (ஜி.எஸ்.எல்.வி.மார்க்-3) ராக்கெட் மூலம் இன்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
மூன்றாவது முறையாக இன்று விண்கலத்தின் சுற்றுப்பாதை உயர்த்தப்பட்டது. மூன்றாவது சுற்றுப்பாதையை உயர்த்தும் செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாகவும், விண்கலம் இப்போது 51400 கிமீ x 228 கிமீ நீள்வட்ட சுற்றுப்பாதையில் உள்ளது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த சுற்றுப்பாதையானது அடுத்து 20ம் தேதி மேலும் உயர்த்தப்படுகிறது. அன்றைய தினம் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை இதற்கான பணிகளை மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
இரண்டாவது முறையாக இன்று விண்கலத்தின் சுற்றுப்பாதை உயர்த்தப்பட்டது. இரண்டாவது சுற்றுப்பாதையை உயர்த்தும் செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாகவும், விண்கலம் இப்போது 41603 கிமீ x 226 கிமீ சுற்றுப்பாதையில் உள்ளது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த சுற்றுப்பாதையானது நாளை மேலும் உயர்த்தப்படுகிறது. நாளை மதியம் 2 மணி முதல் 3 மணி வரை இதற்கான பணிகளை மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
சந்திரயான் 3 விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் வாழ்த்துச் செய்தி வெளியிட்டார். இந்நிலையில், பூடான் பிரதமருக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. உண்மையில், சந்திரயான் வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் நல்வழி காட்டுவதாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.
சந்திரயான் 3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சந்திரயான்-3 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்காக பிரதமர் மோடி மற்றும் இஸ்ரோவுடன் இணைந்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்தத் திட்டம் இந்தியாவுக்கும், மனித குலத்துக்கும் சிறப்பாக பயனளிக்கட்டும் என பதிவிட்டிருந்தார்.
சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்ட காட்சியை பலரும் தங்கள் செல்போன்களில் படம் பிடித்தனர். தொலைக்காட்சிகளும் இந்த காட்சியை வீடியோ எடுத்து வெளியிட்டன. இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் வெளியாகின. அவ்வகையில் சென்னையில் இருந்து டாக்கா நோக்கி சென்ற விமானத்தின் ஜன்னல் வழியாக, சந்திரயான்-3 சீறிப்பாய்ந்து சென்ற காட்சியை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இஸ்ரோ வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், விண்கலத்தின் நிலை இயல்பாக உள்ளது. முதல் சுற்றுப்பாதையை உயர்த்தும் முயற்சி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. விண்கலம் இப்போது 41,762 கி.மீ. x 173 கி.மீ. சுற்றுப்பாதையில் உள்ளது என பதிவிட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் ஐதராபாத் ஐஐடியின் 12வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கலந்துக் கொண்டார். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், ராக்கெட்டுகளை ஒரு குழந்தையைப் போல் கருதுவதாக கூறினார்.
சந்திரயான்-3 விண்கலத்தை சுமந்து கொண்டு ராக்கெட் சீறிப்பாயும் வீடியோவை உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி டுவிட்டரில் ஷேர் செய்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தை ‘புதிய இந்தியாவின் புதிய விமானம்’ என்று வர்ணித்துள்ள அவர், சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டி உள்ளார். மேலும் பிரதமர் மோடியின் தலைமையின்கீழ் இந்தியா புதிய வரலாறு படைக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“नए भारत की नई उड़ान”#Chandrayaan3 के सफल प्रक्षेपण हेतु देश के महान वैज्ञानिकों समेत @isro की पूरी टीम को बधाई। यशस्वी प्रधानमंत्री आदरणीय श्री @narendramodi जी के नेतृत्व में देश एक नया इतिहास रचने की ओर अग्रसर है।
— Pushkar Singh Dhami (@pushkardhami) July 14, 2023
जय हिन्द! 🇮🇳 pic.twitter.com/HQSzRgrUXS
சந்திரயான்- 3 விண்வெளி ஆய்வில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கருத்து தெரிவித்துள்ளார்.
அனைத்தும் சரியாக இருந்தால், சந்திரயான்- 3, ஆகஸ்ட் 1ம் தேதி நிலவின் சுற்றுப்பாதையில் செலுத்தவும், ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 5.47 மணிக்கு தரையிறங்கும் என்றும் இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.