பஞ்சாபில் இன்று முதல் 300 யூனிட் இலவச மின்சாரம்- முதல்வர் பகவந்த் மான்
- ஆம் ஆத்மி அரசாங்கம் பஞ்சாபின் வரலாற்றில் ஒரு புதிய முன்மாதிரியை அமைத்துள்ளது.
- இன்று முதல் பஞ்சாபில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதத்திற்கு 300 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும்.
பஞ்சாபில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாக ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்தது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் ஜூலை 1-ம் தேதி முதல் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்தார். இது தற்போது பஞ்சாப் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து முதல்வர் பகவந்த் மான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
முந்தைய அரசாங்கங்கள் தேர்தல்களின் போது வாக்குறுதிகளை அளித்தன. வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் நேரத்தில் ஐந்து ஆண்டுகள் கடந்துவிடும். ஆனால் எங்கள் அரசாங்கம் பஞ்சாபின் வரலாற்றில் ஒரு புதிய முன்மாதிரியை அமைத்துள்ளது. இன்று பஞ்சாப் மக்களுக்கு அளிக்கப்பட்ட மற்றொரு உத்தரவாதத்தை நிறைவேற்றப்போகிறோம். இன்று முதல் பஞ்சாபில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதத்திற்கு 300 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.