இமாச்சல பிரதேசத்தில் வெற்றி பெறும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் ராஜஸ்தானுக்கு அழைத்து செல்ல முடிவு
- 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக தேர்தல் முடிவு அமைந்து உள்ளதால் இமாச்சலப்பிர தேசத்தில் ஆட்சி அமைக்க இரு கட்சிகளும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
- அம்மாநிலத்தில் 1985-ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு ஆளும் கட்சி வெற்றி பெறுவது இல்லை என்ற நிலை உள்ளது.
சிம்லா:
இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும் காங்கிரசுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஓட்டு எண்ணிக்கையில் இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.
இமாச்சல பிரதேசத்தில் எப்படியும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாரதிய ஜனதா உள்ளது. அதே போல் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் ஆர்வத்துடன் இருக்கிறது.
ஆட்சியை பிடிக்க பாரதிய ஜனதா குதிரை பேரம் போன்ற நடவடிக்கையில் ஈடுபடலாம் என காங்கிரஸ் கருதுகிறது. இதனால் தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பாரதிய ஜனதா பக்கம் தாவி விடாமல் இருப்பதற்காக அவர்களை பாதுகாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.
காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெறும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் பத்திரமாக ராஜஸ்தான் மாநிலத்துக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
தனி பஸ்கள் மூலம் அவர்கள் அங்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். அங்கு அவர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கான ஏற்பாடுகள் மற்றும் வசதிகளை சத்தீஸ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் மற்றும் மூத்த தலைவர் பூபேந்திர சிங்கோடா ஆகியோர் செய்து வருகின்றனர். இந்த பணிகளை காங்கிரஸ் மேலிடம் அவர்களிடம் ஒப்படைத்து இருக்கிறது. இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகளை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உன்னிப்பாக கவனித்து வருகிறார். இன்று பிற்பகல் அவர் சிம்லா வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக இந்த தேர்தல் முடிவு அமைந்து உள்ளதால் இமாச்சலப்பிர தேசத்தில் ஆட்சி அமைக்க இரு கட்சிகளும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அம்மாநிலத்தில் 1985-ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு ஆளும் கட்சி வெற்றி பெறுவது இல்லை என்ற நிலை உள்ளது. இதனால் இம்முறை காங்கிரஸ் ஆட்சியை பிடித்து விடும் என்ற நம்பிக்கையில் அக்கட்சி தொண்டர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
அதே சமயம் இந்த வரலாற்றை முறியடித்து மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற துடிப்பில் பாரதிய ஜனதா உள்ளது. இதனால் இமாச்சல பிரசேத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.