சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் காணிக்கை பணம் மழைநீரில் நனைந்தது
- சபரிமலை பகுதியில் பலத்த மழை பெய்தது.
- மழை பெய்து வருவதால் காணிக்கை பணத்தை எடுத்துச் செல்லும் கன்வேயர் நிறுத்தப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஆடிமாத பூஜைக்காக நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டது. வருகிற 21-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
நேற்று காலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
பக்தர்களுக்கு வசதியாக நிலக்கல் மற்றும் பம்பையில் ஸ்பாட் புக்கிங் மையங்களும் செயல்பட்டன. இந்நிலையில் சபரிமலை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் மழைநீர் தேங்கியது. அதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் நனைந்தது.
பழைய காணிக்கை பெட்டியில் இருந்து காணிக்கை பணத்தை கொண்டு செல்லும் கன்வேயர் மழைநீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணத்தில் ஏராளமானவை, தண்ணீரில் நனைந்து நாசமானதாக தெரிகிறது.
ஆனால் எவ்வளவு பணம் தண்ணீரில் நனைந்தது என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில் தண்ணீரின் நனைந்த பணத்தை உலர வைக்கும் பணியும், பணம் வைக்கப்பட்டிருந்த பகுதியில் தேங்கியிருக்கும் தண்ணீர் மோட்டார் பம்ப் மூலம் அகற்றும் பணியும் நடந்து வருகிறது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் காணிக்கை பணத்தை எடுத்துச் செல்லும் கன்வேயர் நிறுத்தப்பட்டுள்ளது.