இந்தியா

கொரோனா பரவலுக்கு பிறகு மாரடைப்பு பாதிப்பு அதிகரிப்பு- மருத்துவமனைகளில் தீவிர ஆராய்ச்சி

Published On 2023-07-22 04:55 GMT   |   Update On 2023-07-22 04:55 GMT
  • கொரோனா தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து சுமார் 30 மருத்துவ மனைகளில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
  • இதயம் சார்ந்த நோய்களுக்கான பொதுப் பெயர் மருந்துகள் மக்கள் மருந்தகங்களில் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

புதுடெல்லி:

கொரோனா தொற்று பரவலுக்குப் பிறகு மாரடைப்பு காரணமாக இளைஞர்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-

கொரோனாவுக்குப் பிறகு மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளது தொடர்பான 3 வெவ்வேறு ஆய்வுகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் மேற்கொண்டு வருகிறது. முக்கியமாக 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டோருக்கு திடீர் மாரடைப்பு ஏற்படுவது தொடர்பாக சுமார் 40 மருத்துவமனைகளில் ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேவேளையில், கொரோனா தடுப்பூசிக்கும் திடீர் மாரடைப்புக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து சுமார் 30 மருத்துவ மனைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதயம் சார்ந்த நோய்களால் மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்காக தேசிய தொற்றாநோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு நிதி உதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது. அந்த நிதியைக் கொண்டு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

இதயம் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எய்ம்ஸ் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்தின் கீழ் குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்கீழ் 60 கோடிக்கும் அதிகமானோர் பலனடைந்துள்ளனர்.

இதயம் சார்ந்த நோய்களுக்கான பொதுப் பெயர் மருந்துகள் மக்கள் மருந்தகங்களில் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News