டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வெளிநாடு செல்ல தடை
- விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கி சிபிஐ அதிரடியாக நடவடிக்கை.
- மது விற்பனை கொள்கை முறைகேட்டால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை.
மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீடு உள்பட ஏராளமான இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
டெல்லி அரசின் புதிய கலால் கொள்கையை அமல்படுத்தியதில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. துணை முதல்வர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதற்கு முதலமைச்சர் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சிபிஐயின் அடுத்தகட்ட நடவடிக்கையாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மணீஷ் சிசோடியா வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கி சிபிஐ அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
மது விற்பனை கொள்கை முறைகேட்டால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.