திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
- ரூ.300 டிக்கெட் பக்தர்களுக்கு 4 மணிநேரம் ஆனது.
- நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து இரவு 7 மணி வரை 60 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.
தீபாவளி பண்டிகை மற்றும் வார விடுமுறை என தொடர்ந்து விடுமுறை வந்ததால், திருமலைக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி 4 கிலோ மீட்டர் தூரமுள்ள புரோகிதர் சங்க கட்டிடத்தைத் தாண்டி நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 24 மணிநேரம் ஆனது. ரூ.300 டிக்கெட் பக்தர்களுக்கு 4 மணிநேரம் ஆனது. தரிசன வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் காலை சிற்றுண்டி, மதியம் அன்னப்பிரசாதம், பால், குடிநீர் ஆகியவற்றை வழங்கினர். இதுதவிர திருமலையில் உள்ள கல்யாண கட்டா, தங்கும் விடுதிகளில் உள்ள அறைகள், லட்டு பிரசாதம் வழங்கும் கவுண்ட்டர்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து இரவு 7 மணி வரை 60 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று முன்தினம் 67 ஆயிரத்து 785 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.2 கோடியே 38 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.