திருப்பதி பாபவிநாசம் மலையில் சந்தன மரங்களை பிடுங்கி வீசிய யானை கூட்டம்
- திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் யானைகள் உலா வருகின்றன.
- ஸ்ரீவாரி படால பாதை மற்றும் தர்மகிரி வேதப்பள்ளி பகுதியில் யானை நடமாட்டம் உள்ளது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே உள்ள பாபவிநாசம், ஸ்ரீகந்தம் வனத்தில் திடீரென 10 யானைகள் வனப்பகுதியில் இருந்து வந்தன.
வனத்தை பாதுகாக்க அமைக்கப்பட்ட தடுப்பு வேலியையும், சந்தன மரங்களையும் பிடுங்கி எரிந்து யானைகள் நாசம் செய்தன.
ஸ்ரீகண்டம் வனப்பகுதியில் ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருப்பதி தேவஸ்தான பாதுகாவலர்கள் மற்றும் வனத்துறையினர் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஏராளமான வனத்துறையினர் வந்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். அப்போது அங்குள்ள குளத்தில் யானைகள் தண்ணீர் குடித்தன.
திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் யானைகள் உலா வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் யானைகள் தண்ணீருக்காக அருகில் உள்ள ஸ்ரீகண்டம்வனம் மற்றும் பார்வேட் மண்டப பகுதிகளுக்குள் புகுந்தன. ஸ்ரீவாரி படால பாதை மற்றும் தர்மகிரி வேதப்பள்ளி பகுதியில் யானை நடமாட்டம் உள்ளது. கடந்த ஆண்டு முதல் யானைகள் ஒன்றாக சாலையை கடந்து பக்தர்களை பயமுறுத்தியது.
சமீபத்தில், கோடை காலம் தொடங்கும் முன், திருப்பதி மலை வனப்பகுதியில் யானைகள் கூட்டம், ஸ்ரீகண்டம் வனத்துக்குள் புகுந்து வேலியை நாசம் செய்ததால், வனத்துறையினர் உஷார்படுத்தப்பட்டனர்.
மேலும் அந்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.