தலையில் 273 வால்நட்களை உடைத்து கின்னஸ் சாதனை படைத்த இந்திய வாலிபர்
- பாகிஸ்தானை சேர்ந்த முகமது ரஷித் என்பவர் 254 வால்நட்களை உடைத்தது தான் சாதனையாக இருந்தது.
- சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு முகமது ரஷித்தின் சாதனையை தற்போது நவீன்குமார் முறியடித்துள்ளார்.
கின்னஸ் சாதனை படைப்பதற்காக இளைஞர்கள் பலரும் பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பருப்பு வகைகளில் ஒன்றான வால்நட்களை தலையிலேயே உடைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார் இந்தியாவை சேர்ந்த வாலிபர் ஒருவர்.
வால்நட்டின் மேல் ஓட்டை உடைப்பது கடினமான நிலையில் ஒரு நிமிடத்தில் 273 வால்நட்களை தலையில் உடைத்து ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த நவீன் குமார் இந்த சாதனையை படைத்துள்ளார்.
தற்காப்பு கலைஞரான இவர் கின்னஸ் சாதனை படைப்பதற்காக தலையிலேயே வால்நட்டை உடைக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு முன்பு பாகிஸ்தானை சேர்ந்த முகமது ரஷித் என்பவர் 254 வால்நட்களை உடைத்தது தான் சாதனையாக இருந்தது. 2017-ம் ஆண்டு இந்த சாதனையை அவர் படைத்திருந்தார்.
இந்நிலையில் சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு முகமது ரஷித்தின் சாதனையை தற்போது நவீன்குமார் முறியடித்துள்ளார். இவர் தலையில் வால்நட்களை உடைத்து கின்னஸ் சாதனை படைத்த வீடியோவை உலக கின்னஸ் சாதனை அமைப்பில் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தலையில் ரத்தம் சொட்ட சொட்ட நவீன்குமார் ஒரு நிமிடத்தில் 273 வால்நட்களை உடைக்கும் காட்சி பதிவாகி உள்ளது. இதை பார்த்த சமூக வலைதள பயனர்கள் நவீன்குமாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.