இந்திய கப்பற்படைக்கு புதிய வலிமை- ஐ.என்.எஸ்.விக்ராந்த் போர்க்கப்பலின் சிறப்பம்சங்கள்
- 1,700 வீரர்கள் பயணிக்கும்படியாக உருவாகி உள்ள இந்த கப்பலில் 2 அறுவை சிகிச்சை அறைகள், 16 படுக்கைள், பரிசோதனை மையங்கள், சி.டி.ஸ்கேன் வசதி என மினி மருத்துவமனையே இடம் பெற்றுள்ளது.
- மருத்துவபணிக்காக மட்டும் 5 மருத்துவ அதிகாரிகள் உள்பட 21 மருத்துவ பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டன.
புதுடெல்லி:
முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ்.விக்ராந்த் கப்பலை வருகிற 2-ந் தேதி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறார்.
இந்த பிரமாண்டமான போர்க்கப்பலில் தொடக்க விழா 2-ந் தேதி கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் நடைபெறுகிறது.
அன்றைய தினம் கடற்படையில் இணைய உள்ள ஐ.என்.எக்ஸ்.விக்ராந்த் கப்பலில் ஏராளமான சிறப்பம்சங்கள் உள்ளன.
ரூ.20 ஆயிரம் கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த போர்க்கப்பலை பி.எச்.இ.எல். மற்றும் எல்.என்.டி. உள்ளிட்ட சுமார் 500 இந்திய நிறுவனங்கள் ஒருங்கிணைந்து உருவாக்கி உள்ளன.
இந்த கப்பல் இந்திய கடற்படைக்கு மேலும் பலத்தை கூட்டுவதாக அமைந்துள்ளது. மேலும் இந்து மகா சமுத்திரத்தில் இந்திய கடற்படைக்கு வலுசேர்த்து கடல் எல்லைகளை காக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போர்க்கப்பலின் நீளம் 262 மீட்டர்கள் ஆகும். அகலம் 62 மீட்டர்கள் ஆகும். 59 மீட்டர் உயரம் கொண்ட இந்த போர்க்கப்பல் 45 ஆயிரம் டன் எடையை தாங்கும். மேலும் 7,500 நாட்டிக்கல் மைல் வரை தொடர்ந்து பயணிக்கும் வல்லமை கொண்டது.
15 அடுக்குகள் கொண்ட இந்த கப்பலில் 2,500 அறைகள் உள்ளன. அதில் பெண் அதிகாரிகளுக்கு என்று தனித்தனி கேபின்கள் உள்ளன.
இந்த கப்பலில் இருந்து மிக் 29 கே போர்விமானங்கள், கமோவ் 31 ஹெலிகாப்டர்கள், எம்.எச்.-60, ஆர் ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை இயக்கவும், தரையிறக்கவும் முடியும்.
மேலும் 30 விமானப்படை விமானங்களுடன் பயணிக்க கூடிய வல்லமை இந்த போர்க்கப்பலில் உள்ளது. இதன் அதிகபட்ச வேகம் 28 நாட் ஆகும்.
1,700 வீரர்கள் பயணிக்கும்படியாக உருவாகி உள்ள இந்த கப்பலில் 2 அறுவை சிகிச்சை அறைகள், 16 படுக்கைள், பரிசோதனை மையங்கள், சி.டி.ஸ்கேன் வசதி என மினி மருத்துவமனையே இடம் பெற்றுள்ளது. மருத்துவபணிக்காக மட்டும் 5 மருத்துவ அதிகாரிகள் உள்பட 21 மருத்துவ பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டன.
ஈபிள் கோபுரம் கட்டுவதற்கு உபயோகிக்கப்பட்டுள்ள இரும்புகளை விட நான்கு மடங்கு இரும்புகள் விக்ராந்த் போர்க்கப்பல் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கப்பலில் 2,400 கிலோமீட்டர் அளவிற்கு நீளமுள்ள கேபிள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சிறிய நகரத்திற்கு தேவையான மின்சாரத்தை உருவாக்கும் திறன் இந்த கப்பலுக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலின் முதலாவது சோதனை ஓட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்நடைபெற்றது. அதன்பின்னர் கடந்த ஆண்டு அக்டோபர், கடந்த ஜனவரி, ஜூலை மாதம் என மொத்தம் 4 சோதனை ஓட்டங்கள் நடைபெற்ற நிலையில் வருகிற 2-ந்தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.