ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்: ஜனாதிபதி, பிரதமர் கண்டனம்
- கொடூரமான செயல் மனித குலத்திற்கு எதிரான குற்றமாகும், இது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும்.
- காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஜம்மு:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி,
பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதல் மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த வெட்கக்கேடான சம்பவம் ஜம்மு காஷ்மீரில் கவலைக்கிடமான பாதுகாப்புச் சூழலை விளக்கும் உண்மையான படம் என கூறியுள்ளார்.
இந்நிலையில், பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியிருப்பதாவது:- ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது வேதனை அளிக்கிறது.
இந்த கொடூரமான செயல் மனித குலத்திற்கு எதிரான குற்றமாகும், இது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் தேசம் நிற்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதனிடையே பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவம் குறித்து துணை நிலை கவர்னர் மனோஜ் சிங்ஹாவை தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, பயங்கரவாத தாக்குதலால் ஏற்பட்டுள்ள நிலைமையை தொடர்ந்து கண்காணித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் உறுதி செய்யுமாறு கூறியுள்ளார். மேலும், தாக்குதலுக்கு பின்னால் உள்ளவர்கள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, காஷ்மீரில் உள்ள சிவகோரி கோவிலுக்கு நேற்று மாலை பக்தர்கள் சிலர் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். ரியாசி மாவட்டம் தெரியத் கிராமம் அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென பேருந்து மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். அப்போது டிரைவர் நிலைத்தடுமாறியதில் அந்த பேருந்து, பெரிய பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 10 பக்தர்கள் உயிரிழந்தனர்.
மேலும் இந்த தாக்குதலில் 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தகவல் அறிந்தவுடன், போலீஸ், ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், பயங்கரவாதிகளின் தாக்குதலால் இச்சம்பவம் நடைபெற்று இருப்பதற்கான ஆதாரங்களும் கிடைத்திருப்பதாக துணை ராணுவ படையினர் தெரிவித்துள்ளனர். பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களை அடையாளம் காணும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.