இந்தியா

முதல்-மந்திரி பதவிக்கு கடும் போட்டி: இன்று காங். எம்.எல்.ஏ.க்கள் ரகசிய வாக்கெடுப்பு

Published On 2023-05-14 05:26 GMT   |   Update On 2023-05-14 09:06 GMT
  • காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை 5.30 மணிக்கு பெங்களூருவில் நடக்கிறது.
  • சித்தராமையாவுக்கும், டி.கே.சிவக்குமாருக்கும் இடையே முதல்-மந்திரி பதவியை பெறுவதில் கடும் போட்டி நிலவுகிறது.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடந்தது. ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. நள்ளிரவில்தான் இறுதி முடிவு அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சி 223 தொகுதிகளில் போட்டியிட்டு 135 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்தது. 1999-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் காங்கிரஸ் 132 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் 34 ஆண்டுகளுக்கு பிறகு அதிக தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. கடைசியாக 1989 தேர்தலில் 178 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. அதன் பிறகு தற்போது சாதனை வெற்றியை பெற்று முத்திரை பதித்தது.

ஆளும் பா.ஜனதா அனைத்து தொகுதியிலும் போட்டியிட்டு 65 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது. மதசார்பற்ற ஜனதா தளம் 19 தொகுதியை கைப்பற்றியது. சுயேட்சை மற்றும் இதர கட்சிகள் 4 இடங்களில் வென்றன.

ஜெயநகர் தொகுதியில் முதலில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி 294 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் மறுவாக்கு எண்ணிக்கையில் பா.ஜனதா வேட்பாளர் சி.கே.ராமமூர்த்தி 17 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக கூறியதால் அங்கு குழப்பம் ஏற்பட்டது. இதனால் நள்ளிரவில்தான் இறுதி முடிவு அறிவிக்கப்பட்டது.

ஆட்சி அமைக்க 113 இடங்களே தேவை. ஆனால் காங்கிரஸ் 135 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அந்த கட்சிக்கு 42.88 சதவீத ஓட்டுகள் கிடைத்தது.

2018-ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் காங்கிரசுக்கு 55 இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளது. கடந்த தேர்தலில் 80 இடங்களில் அந்த கட்சி வெற்றி பெற்று இருந்தது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தொங்கு சட்டப்பேரவை அமைய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து இருந்தன. ஆனால் கணிப்புகளை தாண்டி காங்கிரஸ் தனி பெரும்பான்மை பெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் செய்தும் பா.ஜனதா கடும் வீழ்ச்சியை சந்தித்தது.

36 சதவீத ஓட்டுகளை பெற்று 65 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த முறை அந்த கட்சி 38 இடங்களை இழந்தது.

எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் இதர கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைக்கும் கனவில் இருந்த குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 13.29 சதவீத ஓட்டுகளே பெற்றது. இந்த தேர்தலில் 18 இடங்களை அந்த கட்சி இழந்தது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை 5.30 மணிக்கு பெங்களூருவில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி தேர்ந்து எடுக்கப்பட உள்ளார். அகில இந்திய பார்வையாளர்கள் இதற்காக பெங்களூரு வந்துள்ளனர். அவர்களது மேற்பார்வையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்படுகிறது.

கர்நாடக முதல்-மந்திரி பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையாவுக்கும், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கும் இடையே முதல்-மந்திரி பதவியை பெறுவதில் கடும் போட்டி நிலவுகிறது.

இரு தரப்பு ஆதரவாளர்களும் முதல்-மந்திரி பதவியை வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் யாரை தேர்வு செய்கிறார்களோ அவரே முதல்-மந்திரி ஆவார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு முதல்-மந்திரி தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

சித்தராமையாவுக்கும், டி.கே.சிவக்குமாருக்கும் இடையே போட்டி நிலவினாலும் முதல்-மந்திரியை ஒரு மனதாக தேர்வு செய்யவே காங்கிரஸ் மேலிடம் விரும்புகிறது. இது தொடர்பாக மேலிட பார்வையாளர்கள் நேற்று இரவு இருவரிடமும் ஆலோசனை மேற்கொண்டனர். இதனால் ஒருமனதாக முதல்-மந்திரி தேர்வு செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இரு தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் தனித்தனியாகவும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

முதல்-மந்திரி தேர்வுக்கு பிறகு கவர்னரை சந்தித்து காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோரும். கர்நாடக புதிய முதல்-மந்தரி பதவி ஏற்பு விழா வருகிற 17 அல்லது 18-ந் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News