சிறுமி, தந்தைக்கு திருட்டு பட்டம் கட்டிய பெண் போலீஸ் அதிகாரிக்கு ரூ.1.75 லட்சம் அபராதம்
- ஜீப்பில் இருந்த பெண் போலீஸ் ரஜிதா என்பவர் தன்னுடைய செல்போனை காணவில்லை என கூறினார்.
- அந்த செல்போனை ஜீப்பின் அருகே நின்றிருந்த ஜெயச்சந்திரனும், அவரது மகளும் எடுத்திருக்க வேண்டும் என்று கருதிய அவர், அவர்கள் இருவரையும் பிடித்து கண்டித்தார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன்.
ஜெயச்சந்திரனும், அவரது 8 வயது மகளும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், அந்த பகுதி வழியாக விண்வெளி ஆய்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ராட்சத கொள்கலனை வேடிக்கை பார்க்க சென்றனர்.
அங்கு பாதுகாப்புக்கு நின்ற பெண் போலீசாரின் ஜீப் அருகே இருவரும் நின்றிருந்தனர். அப்போது ஜீப்பில் இருந்த பெண் போலீஸ் ரஜிதா என்பவர் தன்னுடைய செல்போனை காணவில்லை என கூறினார்.
அந்த செல்போனை ஜீப்பின் அருகே நின்றிருந்த ஜெயச்சந்திரனும், அவரது மகளும் எடுத்திருக்க வேண்டும் என்று கருதிய அவர், அவர்கள் இருவரையும் பிடித்து கண்டித்தார்.
மேலும் திருடிய செல்போனை தந்துவிடும்படியும் கூறி மிரட்டினார். இதை கண்டு மிரண்டு போன ஜெயச்சந்திரனின் மகள் கதறி அழுதார். அப்போது ஜீப்பில் இருந்த இன்னொரு பெண் போலீஸ் , ரெஜிதா தவறவிட்ட செல்போன், ஜீப்பின் சீட்டுக்கு அடியில் கிடந்ததாக கூறி அதனை அவரிடம் கொடுத்தார்.
இதையடுத்து ஜெயச்சந்திரனையும், அவரது மகளையும் ரெஜிதா விடுவித்தார். இந்த சம்பவங்களை அந்த வழியாக சென்றவர்கள் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
சாலையில் வேடிக்கை பார்க்க வந்த தந்தையைம், மகளையும் பெண் போலீசார் திருட்டு பட்டம் கட்டியதாக கூறி அதற்கு கண்டனமும் தெரிவித்தனர்.
இதற்கிடையே தனக்கு திருட்டு பட்டம் கட்டி அவமானப்படுத்திய பெண் போலீஸ் ரெஜிதா மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜெயச்சந்திரன் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த கோர்ட்டு, பெண் போலீசாருக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1.50 லட்சம் நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிட்டது.
இதனை பெண் போலீஸ் ரெஜிதாவிடம் இருந்து வசூலித்து கொள்ளலாம் எனவும் கூறியது. இதையடுத்து கேரள அரசு சிறுமிக்கு வழங்க வேண்டிய நஷ்ட ஈட்டு தொகையான ரூ.1.50 லட்சம் மற்றும் வழக்கு செலவுக்கு ரூ. 25 ஆயிரம் என மொத்தம் ரூ.1.75 லட்சத்தை பெண் போலீஸ் ரெஜிதா வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து உள்ளது.