கேரளாவில் சராசரி அளவை விட இருமடங்கு மழை பொழிவு... பல மாவட்டங்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை
- கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு நாளையும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
- பலத்தமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் பலத்த காற்றும் வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியது. அதிலிருந்தே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. தற்போது பருவமழை தீவிரமடைந்திருப்பதால் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டிருப்பதன் காரணமாக கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. வயநாடு, கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது.
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பது மட்டுமின்றி, தாழ்வான பகுதிகள் மற்றும் பிரதான சாலைகளையும் மழைநீர் சூழ்ந்திருக்கிறது. அது மட்டுமின்றி பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டிருக்கிறது. இந்த கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
மழையால் வயநாடு மாவட்டம் பெரிதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. அங்கு கனமழை காரணமாக இன்றும் பள்ளி-கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களுக்கு இன்றும் விடுமுறை விடப்பட்டிருக்கிறது.
வயநாடு மாவட்டம் மட்டுமின்றி கண்ணூர், கோழிக்கோடு, காசர்கோடு மாவட்டங்களில் இன்று பலத்தமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த 4 மாவட்டங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு நாளையும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமின்றி வருகிற 23-ந்தேதி வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தொடர வாய்ப்பு இருக்கதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு மழையின் தீவிரம் குறையும் என்று கூறப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் பலத்தமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் பலத்த காற்றும் வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்தில் மிகவும் அதிகளவு மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கடந்த 13-ந்தேதி முதல் நேற்று (19-ந்தேதி) வரையிலான ஒரு வார காலத்தில் சராசரியாக 150 மில்லிமீட்டர் மழை பெய்ய வேண்டும்.
ஆனால் மாநிலத்தில் 315.5 மில்லிமீட்டர் மழை பெய்திருக்கிறது. சராசரி அளவை விட இருமடங்கு அதிகமாக மழை பெய்துள்ளது. இந்த ஒரு வார காலத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக கண்ணூர் மாவட்டத்தில் 171 சதவீதமும், கோழிக்கோட்டில் 132 சதவீதமும், மாஹே பகுதியில் 160 சதவீதமும், வயநாட்டில் 95 சதவீதமும் மழை பதிவாகியிருக்கிறது.