மும்பை விமான நிலையத்தில் ரூ.80 கோடி மதிப்பிலான ஹெராயின் கடத்தல்- கேரள வாலிபர் கைது
- மும்பை விமான நிலையம் வழியாக போதை பொருள் கடத்த இருப்பதாக புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- கைது செய்த அதிகாரிகள், போதை பொருள் கடத்தலில் பினு ஜானுக்கு மேலும் பலருடன் தொடர்பு இருக்கலாம் என கருதுகிறார்கள்.
நாடு முழுவதும் போதை பொருள் கடத்தலை தடுக்க வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விமான நிலையங்களிலும் பயணிகளின் உடமைகள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டன.
இந்நிலையில் மும்பை விமான நிலையம் வழியாக போதை பொருள் கடத்த இருப்பதாக புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அதிகாரிகள் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது விமானத்தில் வந்த பயணி ஒருவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது உடமைகளை சோதனை செய்தபோது அதில் எதுவும் இல்லை.
இதையடுத்து அந்த வாலிபரின் டிராலி பேக்கை கைப்பற்றி அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் 16 கிலோ ஹெராயின் போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.80 கோடி ஆகும்.
இதனை கடத்தி வந்த வாலிபர் கேரள மாநிலத்தை சேர்ந்த பினு ஜான் என தெரியவந்தது. அவரை கைது செய்த அதிகாரிகள், போதை பொருள் கடத்தலில் பினு ஜானுக்கு மேலும் பலருடன் தொடர்பு இருக்கலாம் என கருதுகிறார்கள்.
இது தொடர்பாக அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.