இந்தியா

காங்கிரஸ் தலைவர் தேர்தல்- மல்லிகார்ஜூன கார்கே வெற்றி

Published On 2022-10-19 08:53 GMT   |   Update On 2022-10-19 10:43 GMT
  • ஓட்டுப் பெட்டிகள் அனைத்தும் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு காங்கிரஸ் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.
  • காங்கிரஸ் வரலாற்றில் 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவர் ஆவது உறுதியாகி உள்ளது.

பாராளுமன்றத்துக்கு 2014, 2019-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி ராஜினாமா செய்தார்.

தற்காலிக தலைவராக சோனியா பொறுப்பேற்றார். ராகுலை மீண்டும் தலைவராக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி செய்தனர். ஆனால் அவர் ஏற்கவில்லை.

இதற்கிடையே காங்கிரசில் அதிருப்தி தலைவர்களாக உருவான ஜி-23 தலைவர்கள் சோனியா, ராகுலுக்கு பதிலாக புதிதாக ஒருவரை தேர்தல் நடத்தி தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

அதன் பேரில் காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்ய அக்டோபர் 17-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, சசி தரூர் இருவருக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. அவர்கள் இருவரும் நாடு முழுவதும் சென்று காங்கிரசாரிடம் ஆதரவு திரட்டினார்கள்.

இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் 68 இடங்களில் கடந்த திங்கட்கிழமை ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. காங்கிரஸ் நிர்வாகிகளில் 9,915 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் 9,500-க்கும் மேற்பட்ட வர்கள் வாக்களித்தனர். 96 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

மாநில தலைநகரங்களில் நடந்த ஓட்டுப்பதிவுக்கு பிறகு ஓட்டுப் பெட்டிகள் அனைத்தும் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு காங்கிரஸ் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, இன்று காலை 10 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. இதில் 7 ஆயிரத்து 897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே அபார வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் 1000 வாக்குகள் பெற்று தேல்வியடைந்தார். 416 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றிபெற்றதை அடுத்து காங்கிரஸ் வரலாற்றில் 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவர் ஆவது உறுதியாகி உள்ளது.

Tags:    

Similar News