இந்தியா

கேரளாவில் வாசனைக்கு அடிமையாகி மாம்பழம் திருடிய சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு

Published On 2023-02-16 04:50 GMT   |   Update On 2023-02-16 04:50 GMT
  • தவறு செய்யும் போலீசார் மீது சஸ்பெண்டு போன்ற நடவடிக்கை அவசியமானது.
  • மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் முண்டக்காயம் பகுதியைச் சேர்ந்தவர் ஷிகாப் (வயது 38).

இவர் இடுக்கி மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இரவு பணி முடித்த அவர், அதிகாலை 4 மணிக்கு பணியை முடித்து விட்டு, வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார்.

பரதோடு பகுதியில் அவர் சென்றபோது, மாம்பழம் வாசனை வந்துள்ளது. இதனால் வாகனத்தை அங்கு நிறுத்திய ஷிகாப், கீழே இறங்கி பார்த்தார். அப்போது அங்கு ஒரு கடை வாசலில் கூடை கூடையாக மாம்பழங்கள் வைக்கப்பட்டு இருந்ததை கண்டார்.

ஆனால் அதன் அருகில் யாரும் இல்லை. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஷிகாப், மெதுவாக கூடைக்குள் கையை விட்டு மாம்பழங்களை எடுத்துள்ளார்.

தான் செய்வது திருட்டு என தெரிந்திருந்தும், மாம்பழ ஆசையில் அவர் இந்த செயலில் ஈடுபட்டார். இப்படியாக சுமார் 10 கிலோ மாம்பழங்களை திருடிய அவர், தனது வாகனத்தில் பதுக்கிக் கொண்டு அங்கிருந்து நைசாக நகர்ந்து விட்டார்.

இந்த நிலையில் காலையில் கடைக்கு வந்த வியாபாரி, கூடையில் இருந்த மாம்பழங்கள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் போலீசிலும் புகார் செய்தார். போலீசார் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தபோது, சப்-இன்ஸ்பெக்டர் ஷிகாப் மாம்பழங்களை திருடுவது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் அவரை பணியிடை நீக்கம் செய்து இடுக்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு பிறப்பித்தார். இதற்கிடையில் மாம்பழம் திருட்டு காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது.

இந்த சூழலில் மாம்பழம் தொடர்பாக கொடுத்த புகாரை, சம்பந்தப்பட்ட வியாபாரி வாபஸ் பெற்றார். இதனைத் தொடர்ந்து ஷிகாப் பணியில் சேர்ந்தார். இனி பிரச்சினை இல்லை என அவர் நிம்மதி அடைந்த நேரத்தில், கேரள அரசு அதிரடியாக ஷிகாப்பை சஸ்பெண்டு செய்து நேற்று உத்தரவிட்டது.

அரசின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர். தவறு செய்யும் போலீசார் மீது இது போன்ற நடவடிக்கை அவசியமானது. இதனை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News