இந்தியா

ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்: நாசிக் சந்தையில் வெங்காயம் விலை உயர்வு

Published On 2024-09-15 02:59 GMT   |   Update On 2024-09-15 02:59 GMT
  • மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை நேற்று முன்தினம் நீக்கியது.
  • குவிண்டாலுக்கு சராசரியாக ரூ.433 வரை அதிகரித்து இருந்தது.

மும்பை:

மத்திய அரசு கடந்த ஆண்டு பாசுமதி அரிசி, வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் அதன் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. டன் வெங்காயம் 550 அமெரிக்க டாலருக்கு குறைவாக (ரூ.46 ஆயிரம்) ஏற்றுமதி செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டு இருந்தது.

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு காரணமாக மகாராஷ்டிராவில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதன் தாக்கம் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் எதிரொலித்தது. வெங்காய உற்பத்தி அதிகம் உள்ள நாசிக் உள்ளிட்ட தொகுதிகளில் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகள் தோல்வியை சந்தித்தன. விரைவில் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்தநிலையில் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை நேற்று முன்தினம் நீக்கியது.

இதன் எதிரொலியாக இந்தியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தையான நாசிக் லசல்காவ் சந்தையில் வெங்காய விலை உயர்ந்தது. குவிண்டாலுக்கு சராசரியாக ரூ.433 வரை அதிகரித்து இருந்தது. நேற்று லசல்காவ் சந்தைக்கு 425 வாகனங்களில் 5 ஆயிரத்து 182 குவிண்டால் வெங்காயம் வந்தது. குவிண்டால் வெங்காயத்தின் விலை ரூ.3 ஆயிரத்து 700 முதல் ரூ.4 ஆயிரத்து 951 வரை ஏலம்போனது. சராசரியாக ஒரு குவிண்டால் ரூ.4 ஆயிரத்து 700 ஆக இருந்தது.

நேற்று முன்தினம் வெங்காயத்தின் சராசரி விலை குவிண்டாலுக்கு ரூ.4 ஆயிரத்து 267 ஆக இருந்தது.

வெங்காய விலை உயர்வு குறித்து லசல்காவ் சந்தை தலைவர் பாலாசாகேப் ஷிர்சாகர் கூறுகையில், "வெங்காய ஏற்றுமதிக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்த குறைந்தபட்ச விலை கட்டுப்பாட்டை நீக்கியது நல்ல முடிவு. தற்போது சந்தை நிலவரம் அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் தற்போது விவசாயிகளிடம் வெங்காயம் இல்லை. இதேபோல ஏற்றுமதி கட்டணமும் 40 சதவீதத்தில் இருந்து 20 ஆக எப்போது குறையும் என்பதிலும் தெளிவான தகவல் இல்லை" என்றார்.

Tags:    

Similar News